shadow

ஐ.பி.எல்-க்கு போட்டியாக டி.பி.எல். கோவை அணியை லைகா ஏலம் எடுத்தது.

lycaஇந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து அதேபோல் தமிழ்நாடு பிரிமியர் லீக் என்னும் டி.பி.எல் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது. இதில் எட்டு அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. இந்த அணிகள் குறித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ள டி.பி.எல் கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி, தென்சென்னை, கோவை, மதுரை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், காரைக்குடி ஆகிய 8 அணிகள் விளையாடவுள்ளன.

8 அணிகளை ஏலம் எடுப்பதற்கு 22 தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன. குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.1.25 கோடி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. எட்டு அணிகளின் உரிமையாளர்களும் நேற்று தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் அணிகளை ஏலத்தில் எடுத்த எட்டு உரிமையாளர்களின் அறிமுக கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவர் என்.சீனிவாசன், செயலாளர் கே.எஸ். விஸ்வநாதன், துணை தலைவர் பி.எஸ்.ராமன் ஆகியோர் அணிகளின் உரிமையாளர்களை அறிமுகம் செய்து வைத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் தூத்துக்குடி அணியை, தூத்துக்குடி ‘ஸ்போர்ட்ஸ் அன்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட்’ நிறுவனத்தை சேர்ந்த ஆல்பர்ட் முரளிதரன் ரூ.5.21 கோடிக்கும், தென்சென்னை அணியை ‘மெட்ரோநேசன் சென்னை டெலிவிஷன் பிரைவேட்’ நிறுவனத் தலைவர் பா.சிவந்தி ஆதித்தன் ரூ.5.13 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளனர்.

கோவை அணியை ‘லைக்கா’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த ராஜீ மகாலிங்கம் ரூ.5.01 கோடிக்கும், மதுரை அணியை ‘கோதாரி(மெட்ராஸ்)’ நிறுவனத்தை சேர்ந்த ரபீக் அகமது ரூ.4.01 கோடிக்கும், காஞ்சீபுரம் அணியை ‘ரூபி பில்டர்ஸ் அன்ட் புரமோட்டர்ஸ்’ தலைவர் ரூபி மனோகரன் ரூ.3.69 கோடிக்கும் ஏலத்தில் எடுத்து இருக்கிறார்கள்.

திருவள்ளூர் அணியை ‘வி.பி.கிரிக்கெட் அகாடமி’ தலைவர் வி.பி.சந்திரசேகர் ரூ.3.48 கோடிக்கும், திண்டுக்கல் அணியை ‘டெக் சொலிஷியன்’ நிறுவனத்தை சேர்ந்த எச்.ஆர்.சீனிவாசன் ரூ.3.42 கோடிக்கும், காரைக்குடி அணியை ‘செட்டிநாடு அப்பரல்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சேர்ந்த ஹரிஹரன் ரூ.3.3 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளனர்.

போட்டியில் விளையாடும் அணிகளின் வீரர்கள் ஏலம் ஜூலை மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள். இந்திய அணியில் விளையாடும் அஸ்வின், முரளி விஜய் போன்ற தமிழக வீரர்கள் விருப்பப்பட்டால் விளையாடலாம்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதத்தில் 3 வார காலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிக்கான அட்டவணை விரைவில் தயார் செய்யப்படும். சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய இடங்களில் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம்பெறும். இறுதிப் போட்டி, அரை இறுதி உள்பட மொத்தம் 27 ஆட்டங்கள் நடைபெறும். பெரும்பாலான ஆட்டங்கள் இரவு ஆட்டங்களாக இருக்கும். ஒரு சில ஆட்டங்கள் பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெறும்.

இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.1 கோடி பரிசு தொகை வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், 3-வது மற்றும் 4-வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படும். கடைசி 4 இடங்களை பிடிக்கும் அணிக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு தொகை கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

பேட்டியின் போது தென்சென்னை அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன், தூத்துக்குடி அணியின் உரிமையாளர் ஆல்பர்ட் முரளிதரன் உள்பட 8 அணிகளின் உரிமையாளர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply