தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்ய கூடும் என்றும் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே நேற்று இரவு முதல் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறது.

தென்மேற்கு வங்க கடலின் மேல் அடுக்கு மண்டலத்தில் நேற்று உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் பல இடங்களிலும், வெப்பசலனம் காரணமாக வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

வங்க கடலில் உருவான சுழற்சி, இலங்கையில் நிலை கொண்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்யக்கூடும் என்றும், தென்மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுபுற மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply