மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் செலேக என்ற தீவிரவாதிகள் செய்த கலவரங்களை அடக்க அதிபர் ஜொடோடிடா செய்த முயற்சிகள் தோல்வியடைந்ததை ஒட்டி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த நாட்டில் அமைதி குலைந்து கட்டுக்கடங்காமல் வன்முறை பரவியது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் அமைதியை நிலைநாட்ட பிரெஞ்ச் மற்றும் ஆப்பிரிக்க ராணுவ வீரர்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. சுமார் 1 மில்லியன் மக்கள் கலவரத்திற்கு பயந்து அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

இதனிடையே மத்திய ஆப்பிரிக்க குடியரசில் இடைக்கால அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று கவுன்சில் உறுப்பினர்கள் கூடினர். இடைக்கால அதிபர் தேர்தலில் பங்குயி என்ற பகுதியின் மேயராக பணிபுரியும் பெண் வேட்பாளர் கேதரின் சம்பா பன்சா வெற்றி பெற்றார். இவர் முன்னாள் அதிபர் மகன் டிசையர் சங்கா கொலிங்பாவை தோற்கடித்து இந்த பதவியை பிடித்துள்ளார். மேலும் இந்த நாட்டின் அதிபராக பதவியேற்கும் முதல் பெண் இவர்தான் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார்.

முதல்கட்டமாக தீவிரவாதிகளை ஒடுக்கி அமைதியை நிலைநாட்டுவதே தனது தலையாய கடமை என கேதரின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply