shadow

மகாத்மா காந்தி உடலில் எத்தனை குண்டுகள்? சர்ச்சையை கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி

swamyமகாத்மா காந்தி படுகொலை குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன்சுவாமி விடுத்த கோரிக்கை காரணமாக அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

மாநிலங்களவையில் நேற்று ‘பூஜ்ய நேரத்தின்’ பொழுது சுவாமி இதுகுறித்த பிரச்சினை ஒன்றை எழுப்பினார். இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்களின் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி சுவாமி பேசியதாவது:

சமீபத்தில் அரசு மகாத்மா காந்தி படுகொலை தொடர்பான ஆவணங்களை தேசிய ஆவண காப்பகத்தில் இணைத்துள்ளது. அவற்றை எல்லாம் நான் பார்வையிட சந்தர்ப்பம் வாய்த்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் காந்தி படுகொலை குறித்து நிறைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களை எல்லாம் சுப்ரீம் கோர்ட் கட்டுப்படுத்துவதுடன், இதுகுறித்து அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்க வேண்டும்.

மகாத்மா காந்தி உடலுக்கு பிரேதப் பரிசோதனை எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக வழக்கு விசாரணையின் போது எத்தனை குண்டுகள் சுடப்பட்டது என்பது தொடர்பாக சர்ச்சை உண்டானது. செய்தித்தாள்களில் நான்கு குண்டுகள் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அரசுத் தரப்பில் மூன்று குண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் காந்தியைக் கொலை செய்தது என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது ஓட்டுமொத்தமாக கண்டனம் தெரிவித்து இருப்பதற்காக சுப்ரீம்கோர்ட் ராகுல்காந்தியை எச்சரிக்கை செய்தது. இதற்காக வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அது தெரிவித்து இருந்தது.

சுவாமி தன்னுடைய உரையில் சுப்ரீம் கோர்ட் கண்டனம் பற்றிக் குறிப்பிட்ட பொழுது, தனிப்பட்ட நபர்களின் பெயர்களை குறிப்பிடக் கூடாது என்று காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த சுவாமி, “நான் மகாத்மா காந்தியின் பெயரை மட்டுமே குறிப்பிட்டேன்; வேறு எந்த காந்தியின் பெயரையும் குறிப்பிடவில்லை ” என்று தெரிவித்தார்.

Leave a Reply