ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்தி. நேரடியாக குற்றஞ்சாட்டும் சு.சுவாமி

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்தி. நேரடியாக குற்றஞ்சாட்டும் சு.சுவாமி

Subramanian-Swamyகடந்த 2013ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு இத்தாலி நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதாகவும் இந்த விவகாரத்தில் பெருமளவு லஞ்சப்பணம் கைமாறியதாக தெரிய வந்ததால், ஒப்பந்தம் அப்போதே ரத்து செய்யப்பட்டதாகவும் வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இத்தாலியில் நடைபெற்ற ஒரு வழக்கில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக உறுதி செய்யப்பட்டதாக இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் லஞ்சம் கொடுத்த இத்தாலி அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் லஞ்சம் கொடுத்தவர்களே தண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் லஞ்சம் வாங்கியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுப்பிரமணியன் சுவாமி தனது பேச்சில் இந்திய அரசுக்கு ஹெலிகாப்டர்களை வாங்கித்தரும் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் இத்தாலி ஐகோர்ட்டில் சமர்ப்பித்த வாக்குமூலத்தையும் சுட்டிக் காட்டினார். மேலும் இந்த ஊழலில் சோனியா காந்தி நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.  இதுகுறித்து துணை சபாநாயகர் பி.ஜே. குரியன் கூறியபோது, ‘மேல்சபை உறுப்பினராக பொறுப்பேற்று கொண்ட சுப்பிரமணியன் சுவாமி பேசும் முதல்பேச்சு இது என்பதால் அவரது பேச்சை முழுமையாக நீக்க நான் விரும்பவில்லை. எனினும், ஏற்கனவே எம்.பி.யாக இருந்த அனுபவம்மிக்க அவர் வேறொரு அவையின் உறுப்பினராக உள்ள ஒருவரைப் பற்றி (சோனியா) இங்கு பேசக்கூடாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.