shadow

மன்னிப்பா? 2 ஆண்டு ஜெயிலா? ராகுல்காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

rahul gandhiகடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்தபோது, “மகாத்மா காந்தியைக் கொன்றவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான்’ என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதுகுறித்து அவர் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் தானே மாவட்டத்தின் பிவாண்டி அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கிற்கு எதிராக முதலில் மும்பை ஐகோர்ட்டிலும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ராகுல்காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து நீதிபதிகள் கூறியபோது, “நாதுராம் கோட்சே என்பவர் ஆர்எஸ்எஸ் ஊழியர்; அவர் காந்தியைக் கொலை செய்தார் என்பதற்கும், ஆர்எஸ்எஸ் அமைப்பு காந்தியைக் கொலை செய்தது என்று கூறுவதற்கும் மாபெரும் வேறுபாடு இருப்பதாக ஏற்கனவே ஐகோர்ட் கூறியிருக்கிறது.

இப்படியொரு சூழலில், தவறான வரலாற்றுக் குறிப்புகளை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசியது ஏன்? ஒருவேளை வரலாற்று ரீதியாக அது உண்மையாக இருந்தாலும்கூட பொது நன்மைக்கு எதிரானதா? என்பதை யோசித்துப் பேச வேண்டும். யார் மீதும் கண்மூடித்தனமாக குற்றம்சாட்டிவிட முடியாது.

இப்போது மனுதாரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் இந்திய தண்டனையியல் சட்டத்தில் அவதூறு குறித்த சட்டப்பிரிவு 499-இன் கீழ் வருகிறதா? என்பதைத்தான் நாங்கள் ஆராய வேண்டியுள்ளது. ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்காவிட்டால் வழக்கு விசாரணையை எதிர்கொண்டாக வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுத்தனர்.

நீதிபதிகள் குறிப்பிட்ட 499ன் கீழ் குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால் இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நீதிபதிகள் கருத்து குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்கும் கேள்விக்கே இடமில்லை. இதுபோன்ற பரிந்துரையை கடந்த காலங்களில் சுப்ரீம் கோர்ட்டில் முன்வைத்தபோதிலும் அதனை ராகுல் காந்தி நிராகரித்து விட்டார். வரலாற்று உண்மைகளை நன்கு தெரிந்து வைத்திருப்பதில் தேர்ச்சி பெற்ற அரசியல் தலைவர் அவர். ஆர்எஸ்எஸ் குறித்த கருத்தை உரிய தளங்களில் உண்மைத் தகவல்களோடு காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் நிரூபிப்பர் என்று கூறினார்.

Leave a Reply