காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தெற்கு தெருவை சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாணவியை தனது அறைக்கு அழைத்த அப்பள்ளியின் தாளாளர் மகாலிங்கம் (64) மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி, மண்எண்ணை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் திருநள்ளாறு தேனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு காரைக்காலில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் கர்ப்ப பரிசோதனை செய்ததில், அந்த மாணவி கர்ப்பம் அடைந்திருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அந்த மாணவியை மிரட்டி அவரது கர்ப்பம் கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மாற்றுச்சான்றிதழ் கொடுத்து அந்த மாணவி பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதனை தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை செய்ய விசாரணை கமிட்டி ஒன்றை அமைத்து மாவட்ட ஆட்சியர் முத்தம்மா உத்தரவிட்டார். அந்த குழு இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் போலீசாருக்கு பரிந்துரை செய்தார்.

மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மோனிகா பரத்வாஜ் உத்தரவின் பேரில் போலீசார் மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் மகாலிங்கத்தை நேற்று மாலை கைது செய்தனர்.

Leave a Reply