shadow

பாஜக வேட்பாளராக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். பிரச்சாரத்தை தொடங்கினார்
srisanth
தமிழகத்தை போலவே கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலத்திலும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இடம்பெற்றுள்ளார். கேரள தலைநகரான திருவனந்தபுரம் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் நேற்று திருவனந்தபுரத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான பழவங்காடு கணபதி கோவிலில் 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

பின்னர் தம்பானூர் என்ற பகுதியில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஸ்ரீசாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பாரதீயஜனதா சார்பில் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கேரளா படித்தவர்கள் நிறைந்த மாநிலம். ஆனால் இந்த மாநில இளைஞர்கள் உள்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் வேலை தேடி வெளிநாடு செல்லும் நிலை உள்ளது. இது மாறவேண்டும். இளைஞர்களின் வேலை, எதிர்காலம், கல்வி இவைகளில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார். கேரள இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் உள் நாட்டிலேயே உருவாக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார்.

கேரளாவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க நீங்கள் உதவினால் இளைஞர்களின் எதிர்காலம் ஒளிமயமாக மாறும். இளைஞர்கள் அதிகளவு இந்த கூட்டத்திற்கு திரண்டு வந்திருப்பதை பார்க்கும் போது இது தேர்தல் வெற்றிக் கூட்டம் போல காட்சி அளிக்கிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் வழிகாட்டுதல்படி நான் செயல்படுவேன்.

இவ்வாறு அவர் பேசினார். ஸ்ரீசாந்த் வெற்றி வாய்ப்பு குறித்து அம்மாநில ஊடகங்கள் கூறியபோது இளைஞராகவும், புதியவராகவும் இருப்பதால் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளன.

Chennai Today News: Cricket Fixing accused Srisanth “fixed” for BJP’s ticket to contest assembly poll from Thiruvananthpuram.

Leave a Reply