இன்று வைகுண்ட ஏகாதேசி: தமிழக கோவில்களில் பரமபத வாசல் திறப்பு

இன்று வைகுண்ட ஏகாதேசி: தமிழக கோவில்களில் பரமபத வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதா் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

வைணவத் திருத்தலங்களில் நடைபெறக்கூடிய முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசியில் பகல் பத்து, இராப்பத்து என மொத்தம் 21 நாள்கள் நடைபெறும். நடப்பாண்டில் கடந்த 18-ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது.

இதில், ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல்பத்தின் கடைசி நாளான நேற்று (வியாழக்கிழமை) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.

தன்னை தரிசிக்க வருபவர்கள் மம மாயா துரத்யமா எனப்படும் தன்னுடைய மாயையைக் கடப்பது சவாலானது. அவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை. இந்த மூன்றிலும் பெண்ணாசையை ஒழிப்பதுதான் மிகவும் கடினம். ஏன்னென்றால் ஒரு ஜீவன் சரீரம் எடுக்க ஆரம்பித்த காலம் முதலே பெண்ணாசை இருந்து வருகிறது.

நம்பெருமாள் பூண்டிருக்கும் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) மயங்கியதால் அசுரர்கள் அமிர்தத்தை இழக்க நேரிட்டது. ஆகையால், பக்தர்களும் (பக்தர்கள்) மாயையில் மயங்காமல் நம்பெருமாளை பின்தொடர்ந்து சென்றால் சொர்க்கவாசலை (பரமபதவாசல்) அடையலாம் என்ற கருத்தை கூறுவது தான் மோகினி அலங்காரத்தின் சிறப்பு.

இத்தகைய முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு இன்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில், நம்பெருமாள் வருடத்தில் ஒருமுறை மட்டும் அணியும் ரத்ன அங்கியில் பக்தர்களுக்கு சேவை அளித்தார்.

இன்று நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை சமாளிக்கவும், பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்வதற்கு வசதியாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Leave a Reply