shadow

srirangam_gopuram2ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் திருப்பணிகள் ரூ.10 கோடியில் வரும் வியாழக்கிழமை (ஜூன் 5) தொடங்கப்பட உள்ளன.

ஆலயத்தின் ஆயிரங்கால் மண்டபத்தில் அன்று காலை 7.30 மணிக்கு திருப்பணிகள்  தொடங்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ப.தனபால் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஏழு பிரகாரங்களை உள்ளடக்கி 21 கோபுரங்களுடன் 156 ஏக்கர் பரப்பளவில் காவிரி நதிக் கரையில் அமைந்துள்ளது.

 தொன்மை வாய்ந்த சிற்ப வடிவமைப்புகளையும், வழிபாட்டு முறைகளையும், விழாக்களையும் உள்ளடக்கி தமிழர்களின் கலாசார கருவூலமாக கோயில் திகழ்கிறது. தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகிய மூன்றுக்கும் இக்கோயில் சிறப்பு பெற்று விளங்குகிறது.

 இத்தகைய பெருமைகளையுடைய ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு 2001-ஆம் ஆண்டு மஹாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, மீண்டும் மகா கும்பாபிஷேகம் செய்ய ஏதுவாக கோயில் திருப்பணிகளை ரூ.10.45 கோடியில் விரைவில் செய்து முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 இந்தத் திருக்கோயில் திருப்பணிகள் ஜூன் 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ மகா சுதர்சன ஹோமத்துடன் தொடங்கப்பட உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply