shadow

11221593_1586338551617568_2291557580593708440_n

எவன் விஷ்ணுவுக்கு அடிமையோ, அவன் ஸ்ரீ வைணவன்.
எவன்தன்னை, விஷ்ணுவிடம் முழுமையாகச் சரணாகதி
பண்ணிக் கொண்டானோ,அவனுக்கு வைணவத்துவம் சித்திக்கிறது. அவனுக்கு மண்ணுலகில் சுகதுக்கங்கள் சமம். மண்ணுலகில் எல்லா உயிர்களும் அவன் பார்வையில் சமம்.

விஷ்ணுவே சகல தேவதைகளையும் படைத்தான்.
விஷ்ணுவிற்குள் சகல தேவதைகளும் அடக்கம். எனவே விஷ்ணுவையே தனக்குத் தெய்வமாக்கிச் சரணம் அடைந்தவனுக்கு, பிறதேவதை வழிபாடென்பது பொருளற்றதாகிறது.

கங்கை நீரைக் கையில் வைத்திருப்பவன், கிணறு வெட்டித்
தாகம் தீர்த்துக் கொள்ள நினைக்கமாட்டான்.
விஷ்ணுவாகிய எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனை,

“உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன், என்னையும்
உன்னிலிட்டேன்”. என்றவாறு, இரண்டறக் கலந்த
மனப்பாங்கைப் பெற்றபின்,அவனுக்குப் பிற தெய்வ
சிந்தனைக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.

தூய வைணவர்கள் பத்துப்பேர் குழுமியிருக்கும் இடம்
ஒரு திவ்யதேசத்திற்குச் சமம். ஒரு வைணவன் என்பவன்,

1) 12 திருமண் இட்டுக் கொள்ளல் வேண்டும்.
2) அடியார்களின் பெயர்களைத் தனக்குப் பெயராக இட்டுக் கொள்ள வேண்டும்.
3) வலதுபுறத்தில் சக்கரத்தையும், இடதுபுறத்தில் சங்கும் (ஆச்சார்யரிடம் முறைப்படி) பொருத்திக் கொள்ள வேண்டும்.
4) தினமும் பெருமாளுக்கு திருவாராதனம் செய்ய வேண்டும்.
5) திருமந்திரம் என்னும் நாராயண மந்திரத்தை, உணர்ந்து உரைக்கும் ஆற்றல் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதற்குப் பஞ்ச ஸமஸ்காரம்என்று பெயர்.

இந்நிலைகளை அடைந்த ஒரு ஸ்ரீ வைணவனை, எம்பெருமான் எப்போதும் விடாது பின்தொடர்ந்து பாதுகாத்து வருகிறான். பக்தர்கட்காக எதையும்செய்யும் பரந்தாமன், ஒரு வைணவன் வழிமாறிச் சென்றாலும், அவனைத் திருத்திப் பணி கொள்ளச் செய்துவிடுகிறான். இதைத்தான் “திருத்திப் பணி
கொள்வான் எந்தை” என்று ஆழ்வார்கள் மொழிந்துள்ளனர்.

எத்தனையோ மதங்களில் பிரவேசித்து, உண்மை நிலையை அறிந்து,பகவானை அடைய விரும்பிய பக்தர்கள், அவைகளை உதறிவிட்டு வைணவம் புகுந்ததை, வரலாறு காட்டும்.

திருமழிசையாழ்வாரே “சிவவாக்கியர்” என்னும்
பெயரில், சித்தராய் இருந்து சைவம் முதலான சமயங்களில் நுழைந்து, அவைகளில் கடைத்தேற வழியில்லாமையையும், முக்தியடைய உபாயம் இல்லாததையும் அறிந்து,
வைணவத்திற்கு வந்து, (எம்பெருமானாலே திருத்திப் பணி கொள்ளப்பட்டு) ஆழ்வாராக ஆனார்.

விஷ்ணு என்ற சொல்லுக்கு

1) எங்கும் நிறைந்தவர்
2) நன்மை தருபவர்
3) மாயையிலிருந்து அகற்றுபவர்
4) எல்லாப் பொருள்களின் உயிர்நாடியாயிருப்பவர்.

என நான்கு பொருள் உண்டு. இப்பேர்ப்பட்ட விஷ்ணுவே
அனைத்திற்கும் பிறப்பிடம் என்பது, கீதையின் வாக்கு.
ஆதிதேவனாக விளங்கும் இந்த மகாவிஷ்ணுவை,
நீரில் புஷ்பங்களால் அர்ச்சித்தும், அக்னியை ஆகுதி செய்தும், மனதினால், தியானம் செய்தும், சூரியனை நோக்கி
மந்திரங்களைஉச்சரித்தும்,சிலாரூபங்களையும்,
வரைபடங்களையும்,பிம்பங்களையும், வைத்துப் பூஜித்து வழிபடலாமென, பாகவத புராணங்கூறுகிறது.

வைணவ மார்க்கத்தில் அடிப்படையான கொள்கை, அந்த
பரமாத்மாவாகிற விஷ்ணு, உலகம் முழுவதும் வியாபித்து நிற்பதனால், உலகம் அதனுள் அடங்கிய சகல வஸ்துக்களும் அவனுடைய சரீரமாகிறதென்பதுவும்,அவனே அந்த
சரீரத்திற்கு ஆன்மாவாகவும் இருக்கிறான் என்பதாகும்.

அதாவது பரமாத்மா ஆன்மா என்றால், ஜீவாத்மாக்கள்
அவனையேசார்ந்திருக்கின்ற சரீரமாகின்றன. அவன் எஜமானாகின்றான். அவன் சுவாமி.ஜீவாத்மாக்கள்
அவனுடைய சொத்துக்கள். அவன்தான் நம்மைப் பேணிப்பாதுகாக்கின்றவன். நாம் அவனையே
சார்ந்திருக்கின்ற, அவனால் காப்பாற்றப்படுகின்ற
பத்தினியாக – பெண்ணாக ஆகிறோம்.

புருஷன் என்ற சொல் வேண்டியதைக் கொடுக்கிறவன்
என்ற பொருளைத் தருகிறது. (லட்சுமி தேவிதான் அந்த பரந்தாமனின்பத்னி)ஜீவாத்மாக்கள்இந்தலட்சுமியின்,
மனோபாவத்தை அடையும்போது, அந்தப் பரமாத்மாவாகிற எம்பெருமான்,தானே இரட்சிக்கத் தொடங்குகிறான். இது
அவன் கடமையுமாகிறது. அதுவே,ஜீவாத்மாக்களின்
முக்திக்கு வழிகாட்டியாகிவிடுகிறது.

இப்படிப்பட்ட மனநிலையைத்தான்,எல்லா ஆழ்வார்களும் அடைந்து,விஷ்ணுவிடம் தங்கள் பக்தியினையும்,
காதலையும் வளர்த்துக் கொண்டார்கள்.

இந்தப் பக்தி பெருங்காதலில் ஆழ்ந்தமையால், ஆழ்வார்கள் ஆனார்கள்.அதனால்தான் இறைவனை
“கண்ணுக்கு இனியன்” என்று பாடினார்கள்.
“மனத்துக்கு இனியன்” என்று ஆண்டாள் பாமாலை சூட்டினாள். இதனால்தான்” நாவலந்தீவில் வாழும் நங்கை மீர்காள்” என்று எல்லா ஜீவாத்மாக்களையும்,பெண்தன்மையேறிட்டவர்களாய்,.
பெரியாழ்வார் விளக்கினார்.

“நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பா” என்று,
பட்டத்தரசியாகிற லட்சுமிக்கும், நமக்கும் உள்ள
சம்பந்தத்தை, பெரியாழ்வார் தெளிவுபடுத்துகிறார்.

இராமன் கானகம் கிளம்பும்போது இலட்சுமணன் இராமனிடம்,
நானும், சீதையும் உம்மை விட்டு என்றும் பிரியோம் என்று,
உரிமையோடு பேசுகிற நிலையும், இந்த ஜீவாத்மா
தத்துவத்தை உணர்த்துவதுதான்.

இதையே பெரியாழ்வாரும்,

“பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து
பேணி நம்மில்லத் துள்ளே
இருத்துவா னெண்ணி நாமிருக்க
இவளா மொன் றென்னு கின்றாள்
மருத்துவப் பதம் நீங்கினா
ளென்னும் வார்த்தை படுவதன் முன்
ஒருப் படுத்திடு மின் இவளை
உலகளந் தானி டைக்கே”

மருத்துவன் வந்து பார்த்து, நான் பக்குவம் செய்யும்
கால எல்லையைத் தாண்டிவிட்டது என்று, கூறுவதற்கு முன் இவளின் கருத்தையறிந்து, செயல்பட வேண்டும்.
(இவள் உன் மகள்) கண்ணனிடம் பேரன்பு கொண்டவள்.
ஆகவே இப்போதே இவளைக் கொண்டுபோய்,கண்ணன் பால் சேர்த்துவிடுங்கள். இப்பேர்ப்பட்ட மனநிலையை அடைந்தவனே வைஷ்ணவன்.

இவ்விதம் மாறாக் காதல் கொண்டு, மயங்கி நிற்கவைக்கும்,
அந்த மாயவன், நற்குணங்களின் உறைவிடம். நற்குணக்கடல், குணங்களால் உயர்ந்தவள்ளல் என்றெல்லாம்,கம்பர்,
திருமாலின் பெருமையைக் கூறுவர். இறைவன், விஷ்ணு பண்புகளோடு கூடியவன் என்பது, வைணவ அடிப்படைக் கொள்கை… மேன்மையும், நீர்மையும்,
வடிவழகும் கூடிய பசுங்கூட்டமாயிற்று பரத்துவம் என்பது வ்யாக்யானம்.

மேன்மைக்குத் துணையானவை, உலகத் தோற்றத்திற்கு உதவுபவை,அடியாரை உய்விக்க அமைந்தவை, என இறைவனுக்குரிய பண்புகளை மூவகையாகக் கூறுவர்.

மேன்மைக்குத் துணையானவை,,,,

எம்பெருமானைச் சேரவேண்டுமென்று, முக்தி ஒன்றையே குறிக்கோளாக் கொண்ட, பக்தன் அடையக்கூடிய “பரத்வ” நிலையான “அமர்ந்த திருக்கோலம்”.

உலகத்தோற்றத்திற்கு உதவுபவை,,,,

தன்னை வியூகப்படுத்தி,திருப்பாற்கடலில் எழுந்தருளி,
அபயக் குரல்கேட்கும் போதெல்லாம், ஆதரவளிக்கும், “சயன திருக்கோலம்.”. (பிரம்மனும் உலகைப் படைக்கும் முன்,சயன திருக்கோலத்திய பெருமானைத் தரிசித்தபின்பே, உலகு படைக்கலுற்றான் என்பர்)

அடியாரை உய்விக்க அமைந்தவை,,,,,,,

இதுவே விபவ அவதாரமாகவும், அர்ச்சாவதாரமாகவும்,
அந்தர்யாமியாகவும் இருந்து, உலகு நடைபெற, பக்தர்கட்கு அருளும் “நின்றதிருக்கோலம்.”.

இந்த மூன்று குணங்கள், வைணவத்தில் எம்பெருமானின்
கல்யாண குணங்களாச் சித்தரிக்கப்படுகின்றன. இந்த மூன்று குணங்களின் பண்புகளைத்தான்

சௌல்ப்யம் – எளிமை
சௌசீல்யம் – நீர்மை
ஆர்ஜவம் – செம்மை
வாத்ஸல்யம் – பரிவு
சுவாமித்வம் – தலைமை என்றனர்.

யசோதையின் கயிற்றுக்கு கட்டுண்டு நின்ற காட்சியை எளிமைக்கும், மூவுலகும் இருள்தீர
நடந்தமையை நீர்மைக்கும்,
இலங்கையை கட்டழித்த நீர்மையை செம்மைக்கும்,
பாண்டவர்கட்காக தூது நடந்து சென்றதை பரிவுக்கும்,
அமரர்கள் தொழுதேத்த நிற்கும் தன்மையை தலைமைக்கும், பெரியோர் உதாரணம் காட்டுவர்.

இத்தகைய எம்பெருமானிடம்,தன்னைச் சரணாகதி பண்ணிக்கொண்டவைணவனின் லட்சணம் மட்டும் சாமான்யமானதோ, யார் வைணவன் என்பதுபற்றி,
“பாகவத ரஹஸ்யம்” கூறும் விளக்கம் இங்கே தரப்படுகிறது.

கைங்கர்யமும் (கைங்கர்யம் என்றால், எம்பெருமானுக்குத் தொண்டு புரிதல், என்பது பொருள்) நாம ஜெபம் இல்லாமல், யாருக்கு மன நிம்மதி ஏற்படாதோ, அவனே உண்மையான வைணவன். பணிவிடைக்கும் ஜெபத்திற்குமாக, எவன் ஜீவிக்கிறானோ, அவனே வைணவன். வைணவன்என்பவன் பிறப்பதில்லை. ஒருவனுடைய சத்குணங்களே அவனை வைணவனாக உருவாக்குகிறது.

Leave a Reply