shadow

site_2688418f

பவர்பாயின்ட் வடிவிலான காட்சி விளக்கங்களைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான எளிய வழியாக ‘பிரெசோ.டிவி’ அறிமுகமாகி இருக்கிறது. இணையம் மற்றும் செயலி வடிவிலான இந்தச் சேவை மூலமாக யார் வேண்டுமானாலும் காட்சி விளக்கங்களை மற்றவர்களுக்கு ஒளிபரப்பலாம்.

காட்சி விளக்கங்களைப் பயன்படுத்துவது இத்தனை எளிதானதா என வியக்க வைக்கும் அளவுக்கு அமைந்திருப்பதுதான் இந்தச் சேவையின் சிறப்பம்சம்.

வழக்கமாகக் காட்சி விளக்கங்களைப் பயன்படுத்த லேப்டாப்பில் அவற்றைத் தயார்செய்து வைத்துக்கொண்டு பார்வையாளர்கள் முன் திரையில் தோன்றச் செய்வோம். இப்போதோ, இந்த இணையத்தளத்தில் இருந்தே நேரடியாகக் காட்சி விளக்கங்களை ஒளிபரப்பலாம். இதற்காக இந்தத் தளத்தில் உள்ள புதிய ஒளிபரப்பிற்கான பட்டனை கிளிக் செய்தால் போதும், நமது கம்ப்யூட்டரில் உள்ள காட்சி விளக்கக் கோப்பை அணுகி இதில் பதிவேற்றிவிடலாம். அதன் பிறகு இந்த இணையப் பக்க முகவரியைப் பகிர்ந்துகொண்டால் போதும் அதன் மூலம் விரும்பியவர்கள் காட்சி விளக்கத்தைப் பார்க்க முடியும்.

உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ளாமலே கூட இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரே அறையில் இருக்கும் பட்சத்தில் இந்தத் தளத்திலிருந்தே காட்சி விளக்கத்தைப் பார்க்க முடியும். ஆக, மாநாட்டு அரங்கிலோ அல்லது வகுப்பறையிலோ இந்தச் சேவை மூலம் காட்சி விளக்கம் அளித்தால் பார்வையாளர்கள் அதை தங்கள் லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போனிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

இணையதள முகவரி://preso.tv/

Leave a Reply