shadow

தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதற்கெல்லாம் காரணம்… இஷ்டத்துக்கு பியூட்டி பார்லர் விசிட் போவது, கேசத்துக்கு உபயோகப்படுத்தும் டை, மஞ்சள், குங்குமம், சிகரெட் என்று ஏகப்பட்டவை இருக்கின்றன” என்று சூடாகவே சொன்ன டாக்டர் முருகுசுந்தரம் இதுகுறித்து மேலும் விரிவாக பேசினார்.

”சரும ஒவ்வாமைக்கு ‘வைட்டமின் சி’ குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைவு, காஸ்மெடிக் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், அதிக வாசனையுடைய பவுடர், மசாலா உணவுகள் என எண்ணிலடங்காத காரணிகள் உள்ளன. இந்தக் காரணிகள், வெளியிடங்களுக்குப் போகும்போது, புறஊதாக் கதிர்களை தன் பால் ஈர்த்துக்கொள்ளும் சக்தி உடையவை. இதனால் தோல் ஆங்காங்கே சிவந்து போவது, முதுகு பகுதியில் புள்ளிப் புள்ளியாகத் தோன்றுவது, தோலில் வெள்ளை நிறத்தில் தேமல் போன்று தோன்றி அரிப்பை ஏற்படுத்துவது, இந்த வெள்ளை தேமல் கறுப்பாக மாறிவிடுவது, உதட்டில் ப்ளூ மற்றும் வைலட் நிறங்களில் திட்டுத் திட்டாக தோன்றுவது போன்றவை ஏற்படலாம். .

பெண்கள், தங்கள் அழகைக் கூட்டுவதாக நினைத்து பார்லர்களில் ஃபேஷியல், பிளாக் ஹெட்ஸ் ரிமூவல் என்றெல்லாம் செய்து முகத்தில் உள்ள எண்ணெயைச் சுத்தமாக எடுத்துவிடுகிறார்கள். அப்படி எடுக்கும்போதுதான் முகத்தில் சுருக்கம், வயதான தோற்றம், ‘ஹைபெ(ர்) பிக்மென்டேஷன்’ போன்ற பிரச்னைகள் வர ஆரம்பிக்கும். சருமத்தின் இயல்பான நிறத்தை இன்னும் அடர்த்தியாக்கிவிடும். எனவே, உடல்வாகுக்கு ஏற்ப, ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப மாறக்கூடிய, இயற்கையான எண்ணெய் சுரப்பை நாம் மாற்ற நினைக்கக்கூடாது.

இரண்டாவது முக்கியக் காரணம், கேசத்துக்கு டை உபயோகிப்பது. தலையில் அடிக்கும் டை, சருமத்தில் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்று தோன்றலாம். தலையில் பூசப்படும் டையில் இருக்கும் ரசாயனப் பொருட்கள், ரோமக் கால்களின் வழியே ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதுவும், சூரிய ஒளியில் செல்லும்போது உடல் சருமத்துடன் அதிகமாக வினைபுரிந்து பாதிப்பை ஏற்படுத்தும். மஞ்சள் கலந்த குங்குமத்தைக்கூட வெயிலில் போகும்போது உபயோகிக்கக் கூடாது. இதுவும் பிரச்னையை ஏற்படுத்தும். இவை அனைத்துக்கும் ‘பிக்மென்டட் காஸ்மெடிக்ஸ் டெர்மடைடிஸ்’ என்று பெயர்.

சூரியக் கதிர்கள் மூலம்தான் அலர்ஜி ஏற்படும் என்றில்லை, எந்த வகையான ஒளியின் மூலமும் ஒவ்வாமை வரலாம். குறிப்பாக, கேமரா உமிழும் ஒளிக்கு அதிகமாக ஆளாகும் நடிகர், நடிகைகளுக்கும் மற்றும் அதிகளவு ஒளியை உமிழும் பெரிய விளக்குகளின் அருகில் வேலை செய்ய நேர்பவர்களுக்கும் சரும பாதிப்புகள் ஏற்படலாம். இதனை ‘பாலிமோஃபெஸ் லைட் எரப்ஷன்’ என்பார்கள். அதேபோல காற்றில் பரவும் தூசு உள்ளிட்ட பொருட்களாலும் பாதிப்பு கள் ஏற்படலாம்.

சிகரெட் உடல் நலத் துக்குக் கேடு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சிகரெட்டால் சரும பாதிப்பும் ஏற்படும் என்பது பலரும் அறியாதது. சிகரெட்டில் இருக்கும் நிகோடின், ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பரவி தோலை எளிதில் கறுப்பாக மாற்றிவிடும். மேலும் நம் உடம்பில் உள்ள வைட்டமின் பி-5 சத்தையும் வெகுவாகக் குறைத்து, சருமத்தை சென்ஸிட்டிவாக மாற்றிவிடும். இதை ‘பெலெய்க்ரா’ என்பர்” என்ற டாக்டரிடம்,

”சரி, சரும பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள என்னதான் வழி..?”

”ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமுள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 1 கிராம் ‘வைட்டமின் சி’ எடுத்துக்கொள்ளலாம். அதற்கான சிறப்பான சோர்ஸ், நெல்லிக்காய். முட்டை, மீன் ஆகியவற்றில் இருக்கும் ‘வைட்டமின் ஏ’-வும் நம் உடம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களை அதிகரிக்க வல்லவை. இவை, நம் உடலுக்கு உட்புறமாக கொடுக்க வேண்டிய கவனிப்பு. வெளிப்புறப் பராமரிப்பை பொறுத்தவரை, எஸ்.பி.எஃப் (Sun protection factor) 15 என்ற அளவில் இருக்கும் சன்ஸ்க்ரீன் லோஷன் உபயோகிக்கலாம். வெயிலில் செல்வதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே அப்ளை செய்துகொள்வதும், சருமத்தை பாதிக்கும் கதிர்கள் அதிகமாகப் பாயும் காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பதும் நலம். சன்ஸ்கிரீன் லோஷனை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை முகம் கழுவி, மீண்டும் அப்ளை செய்துகொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்திய டாக்டர் முருகுசுந்தரம்,

”சூரியன் நமக்கு எதிரியல்ல. சொல்லப்போனால், ‘வைட்டமின் டி’-ன் சிறந்த தயாரிப்பாளர் சூரிய ஒளிதான். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ‘வைட்டமின் டி’, நமது எலும்புகளுக்கு வலு சேர்க்கும். அது கிடைக்காமல் போனால் எலும்பு முறிவு, முடி உதிர்வது போன்ற பிரச்னைகள்கூட ஏற்படும். ஆனால், ‘வைட்டமின் டி’-ஐ காலை நேர இளவெயிலிலேயே பெற முடியும். எனவே, தேவையான நேரத்தில் தேவையான சூரிய ஒளியை மட்டும் பெற்று, சூரியனின் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்வது அவசியம்!

அதேபோல, பனிக்காலத்தில் நம்மை சுற்றியிருக்கும் காற்றில் ஈரப்பதம் குறைவதால் தோலில் உள்ள ஈரப்பதமும் குறைந்து, அதன் காரணமாக தோலில் வெடிப்புகள் வரலாம். இதனால் நம்முடைய தோலை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு பனிக்காலங்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை தேங்காய் எண்ணெய் அல்லது மோய்ஸ்ச்சரெய்ஸ(ர்) க்ரீம் தடவினாலே, பனி பாதிப்புகளில் இருந்து தோலை எளிதாக பாதுகாத்துக் கொள்ள முடியும்” என்று அக்கறை பொங்கச் சொன்னார்

Leave a Reply