shadow

சிவபெருமான் வீற்றிருக்கும் ஒவ்வொரு தலமும் ஒவ்வொரு சிறப்பை பெற்று விளங்குகிறது. அந்த வகையில் கும்பகோணம் அருகில் உள்ள சிவபுரம் என்ற திருத்தலமும் சிறப்புபெறுகிறது.

குபேரனுக்கு சாபம் :

ஒரு முறை ராவணன் தூய்மையற்றவனாக இத்தலத்திற்கு வந்தான். அப்போது அவனை நந்தி பகவான் தடுத்து நிறுத்தினார். ஆனால் ராவணனை உள்ளே அனுமதிக்கும்படி குபேரன் பரிந்து பேச, கோபமுற்ற நந்தி பகவான் குபேரனுக்கு சாபம் கொடுத்தார். இதனால் குபேரன் தன் நிதிகளை எல்லாம் இழந்து பூலோகத்தில் பிறப்பெடுத்தான்.

அந்தப் பிறவியில் தனபதி என்ற பேராசைக்காரனாக அவன் வாழ்ந்து வந்தான். இருப்பினும் சிவபெருமானை எப்போதும் வழிபட்டு வந்தான். ஒரு நாள் இந்த தலத்தின் வடக்கு பிரகாரத்தில் ஒரு செம்புப் பட்டயம் கிடைத்தது.

அதில் மாசி மாதம் மகா சிவராத்திரி சோமவார பிரதோஷத்தில் உடலில் வடு இல்லாத ஆண் குழந்தை ஒன்றை அதன் தாயும் தந்தையும் பிடித்து நிற்க, வாள் கொண்டு அறுத்து வெளிவரும் ரத்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் பெரும் பொருள் கிடைக்கும் என்று வடமொழி சுலோகத்தால் எழுதப்பட்டிருந்தது. இதனைப் பார்த்ததும் தனபதிக்கு பேராசை அதிகமாகியது.

அந்த பொருளைப் பெற வேண்டி ஒரு தந்திரம் செய்தான் தனபதி. அதன்படி வறுமையில் வாடிய ஒரு தம்பதியினருக்கு சிறிது பொருள் கொடுத்து, அவர்களின் குழந்தையை பலி கொடுக்க சம்மதிக்க வைத்தான். உரிய நாளில் அந்தக் குழந்தையை வெட்ட முயன்றபோது, அந்தக் குழந்தை இத்தலத்தில் அருள்பாலிக்கும் அம்பாளிடம் வேண்டியது.

அம்பாள் ஈசனை வேண்ட, நந்தியின் சாபம் நீங்கி தனபதி மீண்டும் குபேரன் ஆனான். குபேரன் தனபதியாக இருந்தபோது அவனுக்கு குழந்தை கொடுத்த தந்தையாக இந்திரனும், தாயாக இந்திராணியும், குழந்தையாக அக்னியும் வந்தனர். ஆலயத்தின் கிழக்குப் பிரகாரத்தில் சிவலிங்கத் திருமேனி வடிவில் இவர்கள் அருள்பாலிக்கிறார்கள்.

இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அவர் சிவகுருநாதர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாளின் திருநாமம் சிங்காரவல்லி என்னும் ஆர்யாம்பாள். பெரியநாயகி என்றும் அழைக்கிறார்கள். இங்குள்ள இறைவனை திருமால், வெண் பன்றியாய் வழிபட்டு நலம் பெற்றுள்ளார். குபேரனும், ராவணனும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

அங்கப்பிரதட்சணம் :

நகரத்தார் இந்தக் கோவிலை அற்புதக் கற்கோவிலாகக் கட்டியுள்ளனர். கிழக்கு நோக்கியுள்ள ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரம் கம்பீர தோற்றம் கொண்டது. செண்பக மரம் தல மரமாகவும், சுந்தர தீர்த்தம் தல தீர்த்தமாகவும் உள்ளன. சிவாலயங்களில் அங்கப் பிரதட்சணம் செய்யக் கூடிய ஒரே கோவில் இதுவாகும்.

இந்த ஆலயம் அமைந்துள்ள சிவபுரத்தில் பூமிக்கு அடியில் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். அதனால் தான் திருஞானசம்பந்தர் சிவபுரத்திற்கு வந்தபோது, சிவபுரத்து பூமியை காலால் மிதிக்காமல் அங்கப்பிரதட்சணம் செய்து ஆலயத்தை வலம் வந்து, பின்னர் ஊர் எல்லைக்கு அப்பால் நின்றே இறைவனை துதித்து பாடி வழிபட்டார்.

பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். பட்டினத்தாரின் சகோதரி இந்த ஊரில் வாழ்ந்துள்ளார். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிங்காரவல்லி அம்பிகையை, குழந்தை வழிபட்டு உயிர்பிச்சை கேட்டதும் அன்னை வழங்கினாள்.

அன்று முதல் இன்று வரை குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், தோஷங்கள் என எல்லாவற்றையும் போக்கும் தாயாக சிங்காரவல்லி அம்பாள் அருள்பாலித்து வருகிறாள். அம்பிகைக்கு 21 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கும். சில குழந்தைகள் காரணமில்லாமல் அழுவார்கள், பயப்படுவார்கள். அந்த குழந்தைகளை அம்பாளின் சன்னிதியில் கிடத்தி அபிராமி அந்தாதி முழுவதும் பாராயணம் செய்தால் யாவும் நலமாகும்.

கோவில் அமைப்பு :

இந்தக் கோவிலில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும், நான்கு திருக்கரங்களுடனும், மயிலுடன் தனது தேவியர்கள் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி உள்ளார். அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றவர் இந்த முருகப்பெருமான். சிவபுரத்தில் தட்சிணாமூர்த்தியின் காலடியில் ராகு உள்ளார்.

இவரை வழிபட குருசாப தோஷங்கள், நாக தோஷங்கள் அகல்கின்றன. இத்தல தட்சிணாமூர்த்திக்கு அருகில் உள்ள சுவரில் திருமால் வெண் பன்றி வடிவில் வந்து, தாமரை மலரால் ஈசனை வழிபட்டச் சிற்பம் அமைந்துள்ளது. இத்தல பைரவர் நாய் வாகனத்துடன் உள்ளார். இவர் திருவாயிலுக்கு வெளியே தனிக் கோவிலில் வீற்றிருக்கிறார்.

இரண்டாம் கோபுர வாசலில் இடதுபுறம் இவ்வாலயம் இருக்கிறது. இத்தல பைரவருக்கு உளுந்து, வடை மாலை சாத்தி, தயிர் சாதம் மற்றும் கடலை உருண்டை நைவேத்தியம் செய்து வழிபட்டால் வழக்குகள், தகராறு விலகி நிம்மதியான வாழ்வு அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இத்தலத்தில் இருந்த நடராஜர் சிலை அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டது. அது மீட்கப்பட்டு, தற்போது திருவாரூர் ஆலயத்தில் உள்ளது. சிவபுரத்தில் வேறொரு நடராஜர்– சிவகாமி அம்பாள் சிலை எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளது. நடராஜருக்கு எதிரில் நால்வர் மற்றும் பரவையார் சிலை இருக்கிறது.

வெளிச்சுவரில் விநாயகர், முருகர், கஜலட்சுமி, துர்க்கை, சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைந்துள்ளன. சிவபுரத்தில் குபேரனின் சாபம் நீங்கியதும், குபேரன் தனபதியாகி மீண்டும் பெருஞ்செல்வத்துடன் குபேரனாகியதும் சிவன் அருளே.

இங்கு தீபாவளி நாளில் நடைபெறும் குபேர பூஜை வெகு சிறப்பு வாய்ந்தது. கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கே 5 கிலோமீட்டர் தூரத்திலும், சாக்கோட்டைக்கு வடகிழக்கே 2 கிலோமீட்டர் தொலைவிலும் சிவபுரம் அமைந்துள்ளது.

Leave a Reply