சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைவிமர்சனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

சிறுவயதிலிருந்தே சக்திமான் படம் பார்த்து அதைப் போலவே மாற வேண்டும் என்ற கொள்கையில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு அவரது தந்தை கூறும் அறிவுரையால் அந்த எண்ணத்தை கைவிடுகிறார். அதன்பின் தந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது மார்க்ட்ஷிட்டை விற்கிறார். இதனை அடுத்து அவரது வாழ்க்கை திசை மாறுகிறது. அந்த திசை மாற்றம் அவரை எங்கு கொண்டு போய் நிறுத்தியது? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது தான் இந்த படத்தின் கதை

சிவகார்த்திகேயன் தனது நடிப்பில் முதல் முதலாக அசத்தியுள்ளார். காமெடி மற்றும் ரொமான்ஸ் நாயகனாக இருந்த சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க சீரியஸ் நாயகனாக இருக்கிறார். நம்முடைய கல்வி சிஸ்டத்தை ஏன் மாற்ற வேண்டும்? மாற்றுவதால் என்ன பயன்? தற்போதைய கல்வி சிஸ்டத்தில் உள்ள பிரச்சனைகள் என்ன? என்பதை மிக அழுத்தமாக சொல்லும் கேரக்டர்களில் சிவகார்த்திகேயன் மற்றும் அர்ஜூன் நடித்து உள்ளனர்

அர்ஜுன் கேரக்டர் இந்த படத்திற்கு முதுகெலும்பு என்று கூறினால் அது மிகையில்லை. தோல்வி அடைந்த மாணவர்களுக்காக அவர் நடத்தும் பள்ளி, அந்த பள்ளியில் நடக்கும் விஷயங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன

நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு இந்த படம் ஒரு அறிமுகப் படம் என்பதை தவிர சொல்வதற்கு வேறு எதுவுமில்லை. இவானா சில காட்சிகளில் வந்தாலும் நடிப்பில் அசத்துகிறார். ரோபோ சங்கர் மீண்டும் ஒருமுறை ஏமாற்றியுள்ளார்.

வில்லன் அபய் தியோல் மிக அற்புதமாக இந்த நாட்டில் நடக்கும் கல்வி வியாபாரம் மற்றும் பல கல்வியாளர்கள் எதை செய்கிறார்கள் என்பதை அவர் வெளிப்படுத்தி உள்ளார்

இயக்குனர் பிஎஸ் மித்ரன் அவர்கள் தனது அபாரமான திரைக்கதையால் படத்தை விறுவிறுப்பாக சென்டிமெண்ட் கலந்து கொண்டு சென்றிருக்கிறார். ஒரு காட்சியில்கூட தொய்வில்லை என்பது மிகப்பெரிய பலம். நமது நாட்டின் கல்வி சிஸ்டம் வேலையாட்களை தான் உருவாக்குகிறதே தவிர வெற்றியாளர்களை உருவாக்கவில்லை என்பதை அழுத்தமான காட்சிகளுடன் கூறியுள்ளார்

சிவகார்த்திகேயன் அர்ஜுன் மற்றும் வில்லன் அபய்தியோல் ஆகியோர் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் கைதட்டல் கிடைக்கின்றது. நம்முடைய நாட்டில் உருவாகும் கண்டுபிடிப்பாளர்கள் எவ்வாறு நசுக்கப்படுகிறார்கள், அவர்களது கண்டுபிடிப்புகள் எப்படி நயவஞ்சகமாக கொள்ளை அடிக்கப்படுகிறது? ஆகியவற்றை மிக அருமையாக கூறியுள்ளார்

மொத்தத்தில் இரும்புத்திரை திரைப்படத்தை விட இரு மடங்கு சிறப்பானது இந்த ’ஹீரோ’என கூறினால் அது மிகையாகாது

ரேட்டிங்: 4/5

Leave a Reply