நடிகர் சிவாஜி கணேசனின் சிலை வைக்கப்பட்டு இருப்பதால், காமராஜர் சாலை போக்குவரத்தில் பாதிப்பு உள்ளதா? என்பது பற்றி போக்குவரத்து போலீஸ் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் 2006-ம் ஆண்டு பி.என்.சீனிவாசன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், காமராஜர் சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், காந்தி சிலைக்கு முன்பாக நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை வைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து காரணங்களுக்காக இந்த சாலையில் சிவாஜி கணேசனின் சிலையை வைக்க அனுமதிக்கக்கூடாது. அதை வேறு ஒரு இடத்தில் நிறுவ அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். என்றாலும், அரசு முடிவு செய்திருந்த அந்த இடத்தில் சிவாஜி கணேசனின் சிலை வைக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.காந்தி ஆஜரானார். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜரானார். சிவாஜி கணேசன் சிலையை ராணிமேரி கல்லூரி முன்பு நிறுவப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று அட்வகேட் ஜெனரல் வாதிட்டார். இதற்கு மூத்த வக்கீல் காந்தி பதில் அளித்து வாதிட்டபோது, நெடுஞ்சாலைகளில் சிலைகள் நிறுவப்படக்கூடாது. அங்கு சிலை அமைப்பதற்கு அனுமதி கிடைத்திருந்தாலும், போக்குவரத்துக்கு அந்த சிலை இடையூறாக உள்ளது. காமராஜர் சாலையில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு வலதுபுறமாக திரும்பும்போது, வாகன ஓட்டிகள் பக்கவாட்டில் பார்க்க முடியாத அளவுக்கு பார்வையை சிலை மறைக்கிறது என்று குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து நீதிபதிகள், சிவாஜிகணேசன் சிலை குறித்து இப்படி கருத்து கூறப்படுவதால், அந்த பகுதிக்கான போக்குவரத்து போலீஸ் உதவிக்கமிஷனர் தகுந்த விளக்கமளித்து மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த மனு மீதான விசாரணையை நவம்பர் 13-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Leave a Reply