சிரியாவில் நடந்துவரும் போரில் இதுவரை 11,000-திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகாலமாக நடைபெற்றுவரும் போரில் 11,420 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் குண்டு வெடிப்புகளில் சிக்கி பலியானதாகவும், மற்றவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதாகவும் லண்டனை சேர்ந்த ஆக்ஸ்பர்ட் ஆய்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் போரின் தொடக்கத்திலிருந்து சுமார் 6,500 குழந்தைகள் பலியாகியிருக்கலாமென ஐ.நா. சபை தெரிவித்திருந்தது. ஜூலை இறுதியில் ஐ.நா. சபை வெளியிட்ட தகவல் படி அங்கு போர் காரணமாக சுமார் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது குழந்தைகள் பலியாவது மிக அதிக அளவில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் செயல்படும் பிற நிறுவனங்களில் இருந்து மார்ச் 2011 முதல் ஆகஸ்ட் 2013 வரை சேகரிக்கப்பட்ட தகவலில், கொலைசெய்யப்பட்ட ஒவ்வொரு 1000 குழந்தைகளிலும், 112 பேர் கொல்லபடுவதற்கு முன் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply