siddhaபெண்களின் பொதுவான கவலை – முகப்பருக்கள். பருவ வயதில், பருக்களும் கூடவே வரும். இது ‘ஹார்மோன் மாற்றத்தால் வருவதுதான்’ என்றாலும், பருக்கள் ஏன் வருகின்றன.. என்னென்ன சிகிச்சைகள் உண்டு.. உணவில் எதையெல்லாம் தவிர்க்கலாம் என்பது பற்றி விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் பத்மபிரியா.

பரு உருவாகக் காரணம்

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றில் இடையூறு ஏற்படுவதுதான் பரு வருவதற்குக் காரணம் என்கிறது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம்.   அதிக வறட்சி, அதிக உஷ்ணம், அதிகக் கொழுப்பு – இவை மூன்றுமே முகப் பருக்களாகப் பிரதிபலிக்கும். இதைத் தவிர, அதிக மன உளைச்சல், சமச்சீரற்ற ஹார்மோன்கள், எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரப்பதால் முகத்திலுள்ள நுண் துளைகள் அடைபடுதல், மலச்சிக்கல் மற்றும் பொடுகுத் தொல்லை இவை எல்லாமே மிக முக்கியக் காரணங்கள்.

நீண்ட கால சைனஸ் தொல்லைக்கான அறிகுறியாகவும் பரு உண்டாகும். பி.ஸி.ஓ.டி. எனப்படும் சினைப்பையில் நீர்க்கட்டி பிரச்னை இருப்பவர்களுக்கும் பரு உண்டாகலாம். சிலருக்கு, பல்லில் சொத்தை, நோய்த்தொற்று இருந்தாலும்கூட, அதன் வெளிப்பாடாகப் பருக்கள் வர வாய்ப்பு உண்டு.

சிகிச்சை முறைகள்

சருமத்துக்கு வெளிப்புறத்தில் சிகிச்சை எடுப்பதைவிட, உள்ளுக்குள் மருந்து சாப்பிட்டால்தான், பருத் தொல்லைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். எதனால் வந்தது என்ற மூலகாரணத்தைத் தெரிந்து, அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால், பருவை முற்றிலும் போக்கலாம். இதற்கு குறைந்தபட்சம் ஆறு வாரங்களாவது சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.  சித்த வைத்திய முறையில், ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இந்தப் பிரச்னையைத் தீர்க்க, சிறந்த மருந்துகள் உள்ளன.

பருக்களைப் போக்க  சிறந்த மருந்து, மஞ்சிஷ்டா (Rubia cordifolia). இது பொடியாகவும் திரவ நிலையிலும், ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். பொடியாக இருந்தால், தண்ணீரில் கலந்து கஷாயமாகக் காய்ச்சி அருந்த வேண்டும். சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்பட்டு, உடலில் அழுக்குகளை வெளியேற்றி, புண்ணை ஆற்றும். பருக்களில் நீர், சீழ் வடிந்தால், இந்த மருந்தைத் தொடர்ந்து எடுக்கும்போது, காய்ந்து உதிர்ந்துவிடும். பரு வந்த தழும்புகளும் மறைந்து சருமத்துக்குப் பொலிவைக் கொடுக்கும்.

திருநீற்றுப் பச்சிலையை அரைத்து, பருக்களின் மீது தடவ, ஓரளவு கட்டுப்படும்.

இரண்டு ஸ்பூன் திரிபலா சூரணத்தை, சுடுதண்ணீரில் கலந்து முகத்தைக் கழுவலாம்.   எண்ணெய்ச் சருமத்தினருக்கு, பருக்கள் பழுத்து இருக்கும். இவர்கள், திரிபலா சூரணத்தைக் குழைத்து, முகத்தில் ‘பேக்’ போட்டு, 10, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், நல்ல பலன் இருக்கும். ஆனால், எண்ணெய்ச் சருமத்தினர் மட்டுமே இதைப் போடவேண்டும்.

அதிமதுர வேரைப் பொடித்துக் குழைத்து, பருக்கள் மீது போடலாம். தொடர்ந்து போட்டு வர உதிர்ந்துவிடும். இந்தப் பொடியை, பயத்த மாவில் கலந்து, குழைத்து ‘பேக்’ போட்டு, சில நிமிடங்கள் காயவிட்டுக் கழுவலாம்.

அதிமதுரத் தூளை தேநீர் போலக் கொதிக்கவைத்து அருந்தலாம். ஹார்மோன்களைச் சீராக்கி, மன அழுத்தத்திலிருந்தும் விடுபட உதவும். அஜீரணத்தைப் போக்கும். மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது.

வல்லாரைக் கீரையை அரைத்துப் பூசலாம். உணவோடும் சேர்த்துக்கொள்ளலாம். நல்ல பலன் தரும்.

உணவு முறை மாற்றம்!

பருக்களுக்கு, நாம் உண்ணும் உணவும் ஒரு காரணம். சருமப் பிரச்னை இருப்பவர்களுக்கு, கொழுப்புத் தாதுவும் ரத்தத் தாதுவும் சீர்கெடுகிறது. எனவே, ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, கொழுப்பைக் குறைப்பதற்கான உணவுதான் தேவை.

ரத்தத்தைச் சுத்திகரிப்பதில், முக்கியப் பங்கு வகிக்கும் கல்லீரலைப் பலப்படுத்த, கரிசலாங்கன்னிக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, உலர் திராட்சை, வைட்டமின் ஏ நிறைந்த கேரட், பப்பாளி, மஞ்சள் நிறக் காய்கறிகள் பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இவை ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, சுத்திகரிக்க உதவுகின்றன. நாள் ஒன்றுக்கு, குறைந்தது 3 லிட்டராவது அவசியம் தண்ணீர் அருந்த வேண்டும்.

மனசே ரிலாக்ஸ்!

மனதை எப்போதும் ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தமும் பருக்களை அதிகப்படுத்திவிடலாம். இதற்கு ஆழமான சுவாசப் பயிற்சி மிகவும் உதவும். ரன்னிங், ஜாகிங் போன்றவை, ஆக்ஸிஜன் வழங்கலை அதிகரிக்கும் பயிற்சிகள். இதனால், சருமத்துக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன், மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட உதவும்.

தவிர்க்க வேண்டியவை:

மருந்தையோ, கிரீமையோ, கை வைத்திய முறையையோ மாற்றி மாற்றி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

எந்த பவுடரும் போடக் கூடாது. அடிக்கடி சோப் மாற்றுதல், ஃபேஸ்வாஷ் உபயோகித்து முகம் கழுவுதல், டோனர் மற்றும் க்ளென்ஸர் உபயோகிப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்த்தல் நலம்.

டீ, காபி, மசாலாக்கள் நிறைந்த கார மற்றும் புளிக்கவைத்த உணவுகள், வறுத்த, பொரித்த எண்ணெய்ப் பதார்த்தங்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த சீஸ், மில்க் ஷேக், குளிர்விக்கப்பட்ட/உறையவைக்கப்பட்ட உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

Leave a Reply