தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் நாளான இன்று, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் மற்றும் பதவியில் இருந்தபோது மறைந்த எம்.எல்.ஏ. ஒருவருக்கும் இரங்கல் குறிப்பு மற்றும் இரங்கல் தீர்மானம் முறையே வாசிக்கப்படுகின்றன. இவற்றை சபாநாயகர் தனபால் வாசித்தளிப்பார்.
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ரா.ராமலிங்கம், எட்மண்ட், த.ரா.ராஜாராம் ரெட்டி, என்.டென்னிஸ், ர.ச.தங்கவேல், லதா பிரியகுமார், கே.சவுரிராஜன், ப.குருசாமி, கு.பாலகிருஷ்ணன், கே.சின்னசாமி, கே.ஆர்.கணபதி ஆகிய 11 பேருக்கும் இன்று இரங்கல் குறிப்பு சமர்ப்பிக்கப்படுகிறது.
அதுபோல் எம்.எல்.ஏ. பதவியில் இருந்த செ.பெருமாள் மறைவு குறித்து சட்டசபையில் இன்று இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது. அதோடு சட்டசபையின் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்துவிடும்.
அதைத் தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் எதிர்க் கட்சி தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள்.

இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது பற்றி இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply