shadow

கடத்தல்காரர்களை விரட்டி சென்ற இந்திய வீரர்களை கைது செய்த நேபாள வீரர்கள்

nepalஇந்திய-நேபாள எல்லையில் இருந்த கடத்தல்காரர்களை விரட்டிச் சென்றபோது தவறுதலாக நேபாள எல்லைக்குள் புகுந்த இந்திய வீரர்களை நேபாள நாட்டு வீரர்கள் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

நேபாள எல்லையில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சஷாஸ்திர சீமா பால் படைப்பிரிவினர் கடத்தல்காரர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட சிலரைத் துரத்திச் சென்றனர். அப்போது கடத்தல்காரர்கள் நேபாள எல்லைக்குள் சென்றதால் பின்னால் துரத்திய இந்திய வீரர்களும் தவறுதலாக நேபாள எல்லைக் குள் நுழைந்துவிட்டனர். இந்நிலையில் நேபாள நாட்டின் ஜபா மாவட்ட எல்லைக்குள் நுழைந்த 13 இந்திய வீரர்களை நேபாளத்தில் ஆயுதப்படை போலீஸார் கைது செய்து, கெச்சனா முகாமில் தங்க வைத்தனர்.

ஆயுதங்களுடன் நேபாள எல்லைக்குள் நுழைந்ததால் இந்திய வீரர்கள் கைது செய்யப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்திய வீரர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தவறுதலாக நுழைந்தது உறுதி செய்யப்பட்டதால் பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த தகவலை நேபாள மாவட்ட உதவி தலைமை அலுவலர் தம்பாரு பிரசாத் நிராவுலா தெரிவித்தார்.

இந்திய வீரர்கள் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் எஸ்எஸ்பி தலைமை இயக்குநர் பி.டி. சர்மா உடனடியாக நேபாள ஆயுதப் படை போலீஸ் தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து சர்மா கூறும்போது, “இந்திய வீரர்கள் பத்திரமாகத் திரும்பினர். நேபாள வீரர்கள் இந்திய வீரர்களை மரியாதையாகவே நடத்தினர்” என்றார்.

Leave a Reply