shadow

images

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சியால், ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா நாளாக, ஐ.நா., அறிவித்துள்ளது. இதை முன்னிட்டு, நாளை, உலகம் முழுவதும் யோகாசன பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நாடு முழுவதும் அதற்காக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் குறித்த விவரம்: மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நகரில் யோகா நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பயிற்சிகள் மேற்கொள்கின்றனர். சுஷ்மா சுவராஜ், ஐ.நா., தலைமையகத்தில் கலந்து கொள்கிறார். ராஜ்நாத் சிங், லக்னோவில். வெங்கையா நாயுடு சென்னையில். சதானந்த கவுடா, திருவனந்தபுரத்தில். மனோகர் பாரிக்கர் டில்லியில்.

டில்லியில், 5,000 துணை ராணுவ வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

டில்லி ராஜ்பாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், வி.வி.ஐ.பி.,கள், பள்ளி மாணவர்கள் என, 35 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

டில்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் யோகா பயிற்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, இன்று மதியம், 1:00 மணிக்கே விடுமுறை விடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள கடல்களில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய போர்க்கப்பல்களிலும் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

டில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில், அதிகாலையிலேயே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ராணுவ மையங்கள், கடற்படை தளங்கள், விமான தளங்களிலும் நடத்தப்பட உள்ளது.

தனியார் நிறுவனமான ரிலையன்ஸ், ஒரு வாரத்திற்கு இதை கொண்டாட உள்ளது.

முதலில் மறுப்பு தெரிவித்த, உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு, முடிவை மாற்றிக் கொண்டு, யோகா நடத்த முன்வந்துள்ளது. இதுபோல, காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களும் செய்துள்ளன.

கேரளாவில் உள்ள முக்கியமான கிறிஸ்தவ பிரிவுகளில் ஒன்றான, மலங்கரா மார்தோமா சர்ச், இதை வரவேற்றுள்ளது. இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள், யோகா பயிற்சிக்கு முன்வந்துள்ளனர்.

ஏமன் நாடு தவிர்த்து, 192 நாடுகளில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள இந்திய துாதரகங்கள், துணை துாதரகங்களில், யோகா பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதில், அந்நாட்டினர் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில், சர்வதேச யோகா நாளை ஆதரித்து, தீர்மானம் கொண்டு வந்தார், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எம்.பி., துளசி கப்பார்டு.

சர்வதேச யோகா நாளை வரவேற்றுள்ள ஆஸ்திரேலியா, சர்வதேச யோகா மாநாட்டை நடத்த
முன்வந்துள்ளது.

தனியார, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், நாளை, 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தை பறக்கச் செய்து, அதில் யோகா பயிற்சிகள் செய்ய உள்ளது. பயணிகளுக்கு, ஈஷா யோக மையத்தினர் பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்திய தொழில் கூட்டமைப்பினர், தங்கள் அலுவலகங்களில் யோகா பயிற்சி மேற்கொள்ள
உள்ளனர்.

ஐக்கிய அரபு நாடுகளில் யோகா பயிற்சி அளித்து வரும், இவான் ஸ்டான்லி என்பவர், சிரசாசனம் எனப்படும், தலை கீழாக நிற்கும் பயிற்சியை, 60 நிமிடங்களுக்கு செய்து, உலக சாதனை படைக்க உள்ளார். இப்போதைய சிரசாசன உலக சாதனை, 34 நிமிடங்கள்.

டில்லியில், பிரதமர் மோடி தன் வழக்கமான உடையை மாற்றி, டி – ஷர்ட், பேன்ட் அணிந்து, வி.வி.ஐ.பி.,கள் மற்றும் அதிகாரிகளுடன் யோகா பயிற்சி மேற்கொள்கிறார். அவருடன், யோகா குரு ராம்தேவ், அமெரிக்க வேத வல்லுனர் டேவிட் பிராலி, நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஷில்பா ஷெட்டி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி, மல்யுத்த வீரர் சுஷில்குமார் போன்றோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சி, காலை, 7:00 மணிக்கு துவங்கி, 7:35க்கு முடிவடைகிறது.

Leave a Reply