வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் 2 நாள் பயணமாக இலங்கை சென்றார். அங்கு அதிபர் ராஜபக்சே, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோரை சல்மான் குர்ஷித் சந்தித்து பேசினார். ‘‘தமிழர் பகுதிக்கு அதிகாரம் அளிக்கும் பிரச்னையை பேசி தீர்க்க நாடாளுமன்றம்தான் சிறந்த அமைப்பு. இது தொடர்பாக நாடாளுமன்ற தேர்வுக்குழு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்’’ என சல்மான் குர்ஷித்திடம் ராஜபக்சே தெரிவித்தார்.

பின்னர் யாழ்ப்பாணத்தில் இந்தியா உதவியுடன் தமிழர்களுக்காக செய்யப்பட்டுள்ள வீட்டு வசதி மற்றும் சிறு தொழில் திட்டங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டார். அப்போது தமிழர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், ‘‘இலங்கையில் தமிழர்கள் உட்பட அனைத்து பிரிவு மக்களும் சமத்துவம், நீதி, கவுரவம் மற்றும் சுயமரியாதையுடன் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதுதான் இந்தியாவின் நோக்கம். இதற்காக இலங்கை அரசுடன், இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படும்’’ என்றார்.

சல்மான் குர்ஷித்துடனான சந்திப்பை முன்னிட்டு இந்திய நிருபர்களுக்கு பேட்டியளித்த வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், ‘‘வடக்கு மாகாண தேர்தல் நடைபெற இந்தியா முக்கிய பங்காற்றியது. அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் உதவி அவசியம். இங்கு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள இந்தியா உதவ வேண்டும். வடக்கு மாகாணத்தின் தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவம் வெளியேற வேண்டும்’’ என்றார்.

Leave a Reply