shadow

போட்டோ எடுத்தால் ரூ.100 பரிசு. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பின் விபரம்

இந்தியாவில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது நோ பார்க்கிங்கில் கார்கள் மற்றும் இருசக்கர் வாகனங்களை நிறுத்துவதுதான். இதனால் மத்திய அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் நோ பார்க்கிங் பகுதியில் கார்கள் நிற்பதை பார்த்து உடனே போட்டோ எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ரூ.100 பரிசு அளிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு

இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:

நாடு முழுதும் பெரும்பாலான இடங்களில் முறையான பார்கிங் வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் வீடுகளிலும், அபார்ட்மெண்ட்டுகளிலும், அலுவலகங்களிலும், தங்களது வாகனங்களை நிறுத்தும் வசதிகளற்றவர்கள் சாலையோரங்கள், பூங்காக்கள், மற்றுமுள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் எல்லாம் தங்களது வாகனங்களைப் பார்க் செய்து விடுகிறார்கள், இதனால் நடைபாதைகள் வெகுவாக ஆக்கிரமிக்கப்பட்டு விபத்துக்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

மக்களிடையே முறையான பார்க்கிங் வசதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு அரசு இம்மாதிரியான அணுகுமுறைகளைக் கையாள வேண்டியதாகி விடுகிறது. மேலும் இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 2 மில்லியன் கார்கள் நாடு முழுதும் விற்பனையாகின்றன. எனவே கார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பார்க்கிங் வசதிகளையும் மேம்படுத்தும் பொருட்டு இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மேலும் இனிமேல் புதிதாக கார்கள் வாங்கிப் பதிவு செய்யும் போதே; முறையான பார்க்கிங் வசதி உண்டு என்பதற்கான சான்றுகளும் சமர்பிக்கப்பட வேண்டும் என்னும் கட்டுப்பாட்டை விதிக்கவிருக்கிறோம். இதற்கான விதிகள் அடங்கிய திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட மசோதா 2016 விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply