கோடையில் நீர் மாசுபடுவதால் நோய் பரவும் அபாயம்

WaterBorneDiseasescoverimage

கோடைகாலத்தில் நீர் மாசுபடுவதால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், நீர் ஆதாரங்கள் ஆகியவற்றை ஆராய்வதற்கு பொது சுகாதாரத் துறையின் கீழ் நான்கு ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கோடைக்காலம்:தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கோடைக்காலத்தில் பரவும் நோய்கள் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை கோடைக்காலத்தில் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மாசுபட்ட நீரைப் பயன்படுத்துவதால் இந்த நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தும் நீர் நிலைகள், தண்ணீர் ஆதாரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஆய்வகங்கள்: நீர் ஆதாரங்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள், குடிநீர் வழங்கல் வாரியம், மாநகராட்சி நிர்வாகங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்வது வழக்கம்.

இதனைத் தவிர்த்து, பொது சுகாதாரத் துறையின் சார்பில் தமிழகத்தில் நான்கு ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் சென்னை, கோவையில் மட்டும் இந்த ஆய்வகங்கள் இயங்கி வந்தன. அதனைத் தொடர்ந்து கூடுதலாக இரண்டு ஆய்வகங்கள் திருச்சி, திருநெல்வேலியில் அமைக்கப்பட்டது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:

இந்த ஆய்வகங்களில் உள்ள அதிகாரிகள் குழு அந்தந்தப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் புழங்கும் பகுதிகளில் காணப்படும் நீர் ஆதாரங்களை ஆய்வு செய்வார்கள்.

கோடைக்காலத்தில் பரவும் நோய்களைத் தடுக்கும் விதமாக, நீர் ஆதாரங்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

4 வகையான சுகாதார முறைகள்

கோடைகாலத்தில் நோய்கள் பரவாமல் இருக்க நான்கு வகையான சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

*தனிநபர் சுகாதாரம்- அடிக்கடி கை கழுவுதல், சுத்தமாக இருத்தல் உள்ளிட்ட தனிநபர் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

*குடிநீர் சுகாதாரம்- சுத்தமான, காய்ச்சிய குடிநீரை பருகுதல்.உணவு சுகாதாரம்- சுகாதாரமான சூழலில் தயாரிக்கப்பட்ட, புதிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

*சுற்றுப்புற சுகாதாரம்- வசிக்கும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ஈக்கள், கொசுக்கள் பரவாமல் தடுக்க வேண்டும்.

*இந்த நான்கு சுகாதாரத்தையும் கடைப்பிடித்தால் தொற்று நோய் களில் இருந்து 90 சதவிதம் தப்பித்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.