மேலும் ஒரு ஆண்டிற்கு ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட தமிழக அரசு உத்தரவு.

மேலும் ஒரு ஆண்டிற்கு ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட தமிழக அரசு உத்தரவு.
ration card
தற்போது தமிழக மக்களிடம் நடைமுறையில் உள்ள ரேஷன் கார்டு கடந்த 2009ஆம் ஆண்டே முடிந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டப்பட்டு நீட்டித்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மீண்டும் இந்த ரேஷன் கார்டில் 2016ஆம் ஆண்டிற்கான உள்தாள் ஒட்டப்படும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, ”தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளை ஆதார் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணினி தொகுப்பினை அடிப்படையாக கொண்டு மின்னணு (எலக்ட்ரானிக்) குடும்ப அட்டையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொது விநியோகத் திட்டத்தினை முழு கணினி மயமாக்கும் திட்டத்துடன் ஒருங்கிணைத்து புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணியினை 2015 டிசம்பர் மாதத்துக்குள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்தப் பணிகள் முடிவடைய இன்னும் சில காலம் ஆகும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை மேலும் ஒரு ஆண்டு நீடிக்கவும், ஏற்கனவே குடும்ப அட்டையில் உள்ள உள் தாளை பயன்படுத்திக் கொள்ளவும் உரிய ஆணைகள் வெளியிடுமாறு அரசை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கேட்டுக் கொண்டது.

இதை கவனமுடன் பரிசீலித்த பின்பு அவரது கருத்துகளை ஏற்றுக் கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1.1.2016 முதல் 31.12.2016 வரை மேலும் ஓராண்டிற்கு நீடித்தும், இதற்காக தற்போது குடும்ப அட்டையில் காலியாக உள்ள உள்தாளினை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தும் அரசு உத்தரவிடுகிறது”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply