வாக்காளர்களுக்கு பணம் தருபவர்களுக்கு தண்டனை தரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு தருவதற்காக கொண்டு செல்லபட்ட போது பிடிபட்ட தொகை மட்டும் ரூ.60.10 கோடி என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

ஏற்காடு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தது முதல் இன்று வரை, ரூ. 8.6 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பணமும், நகைகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஏற்காடு தொகுதியுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.16 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. மொத்தம் 630 தொகுதிகளை உள்ளடக்கிய 5 மாநிலங்களில் கைப்பற்றப்பட்ட தொகையில் பாதியளவுக்கு கணக்கில் காட்டப்படாத பணம் ஏற்காடு தொகுதியில் மட்டும் பிடிபட்டிருக்கிறது. இதிலிருந்தே ஏற்காடு இடைத்தேர்தலில் எவ்வளவு பணம் புழங்குகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.

எத்தனையோ தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் தேர்தல் ஆணையம் பணபலத்தை ஒடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இன்று வரை எவரும் தண்டிக்கப்படவில்லை. இந்த அளவுக்குத் தான் ஆணையத்தின் செயல்பாடுகள் உள்ளன.

தேர்தல் ஆணையமும் வாக்காளர்களுக்கு பணம் தருபவர்களை எச்சரிப்பது, கண்டித்து விட்டு விடுவது, வழக்குப்பதிவு செய்துவிட்டு தொடர்நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது என்பன போன்ற பெயரளவிலான நடவடிக்கைகளை எடுப்பதுடன் நின்று விடக்கூடாது. ஓட்டுக்கு பணம் தருபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகளை தேர்தல் ஆணையம் பெற்றுத்தர வேண்டும். அப்போது தான் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.

Leave a Reply