ரயில்வே துறைக்கு மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி குறைந்துபோனதால் ரயில்வே வளர்ச்சிப் பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறினார்.

ரயில் நிலைய நிர்வாக பதிவேடுகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் ஆய்வுக்காக தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தனி ரயில் மூலம் செங்கோட்டை வந்தார். பின்னர் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

நேற்று 2 வது நாளாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு, பின்னர் மேலப்பாளையத்தில் நடைமேடைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“செங்கோட்டையை தொடர்ந்து இன்று நெல்லை முதல் நாகர்கோவில் வரையிலான ரயில் நிலையங்களில் கட்டுமானம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வோம். மேலப்பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் நடைமேடை பணிகள் துரிதப்படுத்தப்படும்.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு வழங்கப்படும் நிதியின் அளவு குறைந்து வருவதால் வளர்ச்சி பணிகளில் சிறிய அளவிலான தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் நெல்லை சந்திப்பில் 4 மற்றும் 5 வது பிளாட்பார பணிகள் நிறைவுபெறும் அங்கு 2 எக்ஸ்லேட்டர் பணிகள் மற்றும் நடைமேடை பணிகள் துரிதப்படுத்தபடும்” இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ரஸ்தோகி மற்றும் திருநெல்வேலி ரயில்வே நிலைய மேலாளர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply