shadow

சென்னை வந்த பிறகே ரயில் கொள்ளை நடந்ததா? சிபிசிஐடி விசாரணையில் புதிய தகவல்கள்

trainசேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் இந்திய ரிசர்வ் வங்கியின் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன் தினம் ரயில்வே போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இந்த கொள்ளை ஓடும் ரயிலில் நடைபெறவில்லை என்றும் சென்னை வந்த பின்னரே நடந்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட ரயில் சேலத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி கிளம்பி 9-ம் தேதி அதிகாலை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. பின்னர், பணம் இருந்த சரக்கு பெட்டி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு எழும்பூரில் உள்ள பார்சல் சர்வீஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் பார்சல் சர்வீஸ் பகுதியில் தான் இந்த கொள்ளை நடந்திருக்க வேண்டும் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏனெனில் பணம் கொண்டு வரப்பட்ட எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் நுழையும்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பணம் வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளை எதுவும் இல்லை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் கொள்ளையை ரயில் பெட்டியை பற்றி நன்றாக தெரிந்தவர்களே செய்திருக்க முடியும் என்றும் கொள்ளையர்களுடன் ரயில்வே மற்றும் வங்கி ஊழியர் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply