shadow

ரஜினி என் தலைவர். அவரை பற்றி தப்பாக பேசினால்….ராகவே லாரன்ஸ் ஆவேசம்

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் ஒருநிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென அந்த நிகழ்ச்சிக்கு செல்லும் திட்டத்தை ரஜினி கைவிட்டார். இதற்கு ஆதரவு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் ராகவா லாரன்ஸ் ரஜினிக்கு எதிராக கருத்து கூறுபவர்களுக்கு ஆவேசமாக அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தலைவர் ரஜினிகாந்த் குறித்த தங்கள் பார்வையை, ஆங்காங்கே பலரும் தெரிவித்து வருவதை காண முடிகிறது.

நான் அவரது மிகப்பெரிய ரசிகன் மற்றும் தொண்டன் என்ற முறையில், ஏன் அவர் ஒரு என்னுடைய தன்னிகரில்லாத தலைவர் இருக்கின்றார் என்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

பத்து பேர் பின்னால் இருந்தாலே கட்சி ஆரம்பித்து, ஆட்சிக்கு ஆசைப்படும் இக்காலத்தில், கோடிக்கணக்கான உயிர் ரசிகர்கள் உடனிருந்தும், அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர் என் தலைவர்

இரண்டாவதாக, இத்தனை பெரிய ரசிகர் படை வைத்திருக்கும் என் தலைவர், மிக எளிதாக, ஆறு மாதத்திற்கு ஒரு படம் நடித்து வெளியிட்டு, மிகப்பெரும் பணம் சேர்க்கலாம். ஆனால், இரண்டு மூன்று வருடத்திற்கு ஒர் படம் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வது, அவர் பணத்தின் மேல் ஆசை இல்லாதவர் என்பதை நிரூபிக்கிறது.,

பிரதமர் அவர்களது நம் மாநில வருகையின்போது அவர் சந்திக்க விரும்பிய, சந்தித்த ஒரே தலைவர் அனேகமாக சூப்பர் ஸ்டார் மட்டுமாகத்தான் இருக்கும். அவரது நன்மதிப்பும், போலித்தனமின்மையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்

இந்தியாவிலேயே, நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தில் இருந்துவரும் போதும், நாட்டிலேயே மிகப்பிரபலமான நடிகராக இருக்கும்போதும், எந்தவிதமான ஆசையும், ஆணவமும் இல்லாமல் , ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்து பயணம் செய்பவர் அவர்

இவை, தலைவரை மதித்து வணங்கும் என் ஒருவனின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்கள் அவரை நேசிப்பதற்கு காரணமும் இதுதான்

சிலர், தலைவரை குறித்து தவறாக பேச நினைக்கலாம். ஆனால், அவரை நன்கு அறிந்தவர்கள், அவரை மதித்து வணங்குபவர்கள் அந்த கோடிக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply