shadow

punnainalllur-rama-temple-2தஞ்சை மாநகருக்குக் கிழக்கே 5 கி.மீ தொலைவில் நாகை நெடுஞ்சாலையில் வடபுறம் உள்ள ஏரிக்கரையோரம் பசுமையான வயல்வெளி, சோலைகளுக்கு இடையே காட்சி தருவது ‘புன்னை நல்லூர் கோதண்ட ராமர் திருக்கோவில்’.

சாலையிலிருந்து பார்த்தாலே கிழக்கு நோக்கிய ராஜ கோபுரம் தெரியும். புகழ்பெற்ற பிரார்த்தனைத் தலமான புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோவில், கைலாசநாதர் என்னும் சிவாலயமும் அருகருகே அமைந்துள்ளன. தஞ்சையைச் சோழர்களும், நாயக்கர்களும், பிறகு மராட்டியர்களும் ஆண்ட வரலாறுகள் உண்டு.

கி.பி.1739 முதல் 1763 வரை தஞ்சையை ஆண்ட பிரதாப சிங் என்ற மராட்டிய மன்னர் உருவாக்கிய ஆலயம் தான் இது. முன்னொரு காலத்தில் புன்னை மரக்காடாக இருந்ததால் ஊரும் புன்னை நல்லூர் என்றே அழைக்கப்படுகிறது.

ராஜ கோபுரம்:

நில மட்டத்திலிருந்து சற்று உயரமான இடத்தில் திருக்கோவில் அமைந்துள்ளதால் 12 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 5 நிலை ராஜகோபுரம் பொலிவுடன் வரவேற்கிறது. உள்ளே நுழைந்தவுடன் தெற்கு பிரகாரத்தில் சங்கு சக்கரம் ஏந்தி நமது விநாயகப் பெருமான் தும்பிக்கை ஆழ்வாராக ஆசி வழங்குகிறார், அவருக்குத் தோப்புக்கரணம் போட்டுவிட்டு கொடி மரத்தைத் தாண்டிச் சென்றால் மண்டபத்தில், கருடாழ்வார் சன்னிதி உள்ளது.

எதிரே சவுந்தர்ய விமானத்தின் கீழ் கோதண்டம் ஏந்திய கையனாக ராமபிரானின் எழில் உரு கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகிறது. வலதுபுறம் சீதாதேவியும், இடப்புறம் ராமனை விட்டு என்றும் பிரியாத இளைய பெருமாளான லட்சுமணனும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.

மற்ற கோவில்களில் ஆஞ்சநேயர் பக்தியோடு நிற்பார். ஆனால் எங்கும் இல்லாத அதிசயமாக சுக்ரீவன் இங்கே வணங்கிக் கொண்டிருக்கிறார். வானர அரசனான சுக்ரீவன் அரசனுக்கே உரிய அலங்காரங்களுடனும் மீசையுடனும் இங்கே தோன்றி சேனையுடன் சென்று இலங்கைப் போரில் ராமனுக்கு உதவி செய்ததை பக்தியோடு நினைவு கூர்கிறார்.

இத்திருக்கோவில் கருவறையில் உள்ள மூல மூர்த்தங்கள் அனைத்தும் பிற கோவில்களைப் போல கல்லினால் உருவாக்கப்பட்டது அல்ல. சாளக்கிராமம் என்னும் புனிதப் பொருளால் வடிவமைக்கப்பட்டவை ஆகும். ஒரு சிறிய சாளக்கிராமக் கல்லை வைத்து வழிபட்டால் நிறைந்த புண்ணியம் கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு.

ஒரு சில திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள புகழ்பெற்ற பெருமாள் மூர்த்தங்கட்கு சாளக்கிராம மாலை அணிவித்து வழிபடுகிறார்கள். அதனால் அருட்சக்தி அதிகமாகப் பெருகுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால், மூர்த்தங்கள் முழுவதுமே சாளக்கிராமத்தால் ஆனது என்றால் அதன் பெருமை, சக்தி எவ்வளவு இருக்கும் என்பது கற்பனைக்கு எட்டாதது.

சாளக்கிராமம் என்பது நேபாள நாட்டின் புண்ணிய நதியான கண்டகியில் கிடைப்பதாகும். இங்கே உள்ள சீதா, ராம லட்சுமண, சுக்ரீவ மூர்த்தங்கள் சாளக் கிராமத்தினாலேயே உருவாக்கப்பட்டு நேபாள மன்னரால் தஞ்சை மன்னருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் இங்கே ஆலயம் அமைத்து வழிபட்டதாகவும் வரலாறு உள்ளது.

எனவே முக்தி நாத் சென்ற பலன் கிடைக்கும் என்கிறார்கள். பிரகாரத்தினைச் சுற்றி வரத் தொடங்கும் போது மண்டபத்துக்கு எதிரில் வடக்கு நோக்கிய சன்னதியில் சக்கரத்தாழ்வாரும், பின்னே யோக நரசிம்மரும் அருள் தருகின்றனர். இது இந்த நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகும்.

பிரகாரத்தின் மூன்று திசைகளிலும் உள் மண்டபங்கள் உள்ளன. அதன் சுவர்கள் முழுவதும் ராமாயணக் காட்சிகள் வண்ண ஓவியங்களாக மின்னுகின்றன. சுற்றி வரும் போது வடக்கு பிரகாரத்தில் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், உடையார், மகாதேசிகர் ஆகியோர் ஒரே சன்னிதியில் இருக்கின்றனர்.

இத்திருக்கோவிலின் தல விருட்சமான பரந்து விரிந்த புன்னை மரம் கரும்பச்சை இலைகளுடன் அசைந்தாடி குளிர்காற்றை வீசுகிறது. அதை ஒட்டி உள்ள மண்டபத்துடன் கூடிய சன்னிதியில் ஆஞ்சநேயர் நின்றவாறு அருள்கிறார். வலது கையைக் காட்டி பக்தர்களை ஆசீர்வதிக்கும் ஆஞ்சநேயரின் இடது கையில் வழக்கம் போல் ‘கதை’ இல்லை மாறாக தாமரைப் பூவை ஏந்தி தெற்கு திசை நோக்கி நிற்கின்றார்.

சீதையின் இருப்பிடம் கண்டு அந்த நல்ல செய்தியை ராமனுக்குச் சொல்ல, தாமரைப் பூவுடன் செல்வதாக ஐதீகம். இந்த ஆஞ்சநேயரின் மண்டபக் கூரையில் பன்னிரண்டு ராசிக் கட்டங்கள் உள்ளன. பக்தர்கள் தங்கள் ராசிக்குக் கீழ் நின்று கொண்டு சொல்லின் செல்வனான அனுமனைப் பிரார்த்தித்தால் வேண்டியது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கோவிலுக்கு வெளியே தேரடி மண்டபத்தில் கல்விக்கு அதிபதியான லட்சுமி ஹயக்கிரீவருக்கு ஒரு தனி சன்னிதி உள்ளது. குழந்தைகளும், மாணவர்களும், கல்வி வளரவும், கலைகள் மிளிரவும் வேண்டிக் கொண்டு செல்கின்றனர். ஆரவாரமில்லாத கிராமச் சூழலில், அமைதியும், ஆனந்தக் காற்றும் தவழும் ஆலயம் என்பது இதன் சிறப்பு.

Leave a Reply