shadow

அடுத்த ஆண்டுவரை காத்திருக்க முடியாது. நேதாஜியின் ஆவணங்களை இன்றே வெளியிட வேண்டும். காங்கிரஸ்
nethaji
சமீபத்தில் நேதாஜியின் ஆவணங்களை மேற்குவங்க அரசு வெளியிட்டதை தொடர்ந்து மத்திய அரசும் தன்னிடம் உள்ள நேதாஜியின் ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், நேதாஜியின் குடும்பத்தினர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேதாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமர் நரேந்திரமோடியை நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது, அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நேதாஜி தொடர்பான ஆவணங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 23-ம் தேதி முதல் வெளியிடப்படும் என்று மோடி அறிவித்தார்

ஆனால் மோடியின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  அடுத்த ஆண்டு வரை காத்திராமல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களை மத்திய அரசு இன்றே வெளியிட வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.  இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மத்தியில் ஆட்சி செய்த முந்தைய அரசுகள் நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட மறுத்து வந்ததாக காங்கிரஸ் கட்சியை மனதில் வைத்து பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

இது விஷயத்தில் காங்கிரஸ் கட்சியை குறை கூறும் மோடி, பாஜக மூத்த தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் மீதும் குறைகூற வேண்டும். ஏனெனில், காங்கிரஸ் கட்சி மட்டுமே தொடர்ந்து ஆட்சியில் இல்லை. இடையிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உட்பட வேறு அரசுகளும் ஆட்சியில் இருந்தன. குறிப்பாக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நேதாஜி ஆவணங்களை வெளியிடாதது ஏன் என்பதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும்.

மேலும், நேதாஜி ஆவணங்களை அடுத்த ஆண்டு ஜனவரி 23 முதல் வெளியிடப் போவதாக மோடி கூறியுள்ளார். மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி தர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். நேதாஜி ஆவணங்களை வெளியிடுவது என முடிவு செய்த பிறகு அடுத்த ஆண்டு வரை ஏன் காத்திருக்க வேண்டும். இன்றோ அல்லது நாளையே ஆவணங்களை வெளியிட வேண்டும்.

இவ்வாறு ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

Leave a Reply