மும்பை மகாலட்சுமி பகுதியில் பாழடைந்த நிலையில் கிடந்த சக்தி மில்லை படம் பிடிப்பதற்காக சென்ற 23 வயது பெண் புகைப்பட பத்திரிகையாளர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சலீம் அன்சாரி, விஜய் ஜாதவ், சந்த்பாபு சத்தார் ஷேக், காசிம் பெங்காலி மற்றும் சிராஜ் ரகுமான் கான் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தானே சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் மும்பை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிராஜ் ரகுமான் கான் சிறையில் இருந்து தப்பியோடி விட்டதாக செய்தி வெளியானது.

சிராஜ் ரகுமான் கானை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறினார். இது குறித்து சிறை கண்காணிப்பாளர் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் சிராஜ் ரகுமான் கான் தானே சிறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிறைத்துறை ஏடிஜிபி மீரான் கூறுகையில், ‘‘சிராஜ் ரகுமான் சிறையில்தான் உள்ளார். இது குறித்து சிறை கண்காணிப்பாளரிடம் பேசினேன். எப்படி குழப்பம் நடந்தது என தெரியவில்லை’’ என்றார்.

சிறை அதிகாரிகள் மற்றும் மகாராஷ்டிரா போலீஸ் இடையே ஏற்பட்ட குழப்பம்தான் இந்த நிலைமைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறுகையில், “குற்றவாளி சிராஜ் ரகுமான் கான் குற்றப்பிரிவு போலீசிடம் இருப்பதாக சிறை அதிகாரிகள் கூறினர். அதே சமயத்தில் அவன் தானே சிறையில் இருப்பதாக போலீசார் கூறினர். இந்த குழப்பத்தால்தான் குற்றவாளியை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை என்றார்.

மும்பை போலீசார் கைதிகளை தப்ப விடுவது கடந்த இரண்டு வாரத்தில் இது இரண்டாவது தடவை ஆகும்.

Leave a Reply