shadow

நீண்ட காலமாக அரியர் வைத்த மாணவர்களுக்கு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

பட்டயக் கல்வியை முடித்து நிலுவைப் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ள முன்னாள் மாணவர்களுக்கு 2019-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகத் தேர்வு எழுதவும், தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த முடியாமலும் தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 4 பருவத் தேர்வுகளில் சிறப்பு அனுமதி வழங்கவேண்டும் என்றும், இதற்கான தேர்வு கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக ஆணை வழங்கவேண்டும் என்றும் தொழில்நுட்பக்கல்வி இயக்கக தேர்வு வாரியத் தலைவர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி 2021-ம் ஆண்டு மற்றும் 2022-ம் ஆண்டுகளில் நடைபெறும் பருவத் தேர்வுகளின்போது மட்டும் சிறப்புத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல, தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு தலா ரூ.65 தேர்வு கட்டணமாகவும், ஒவ்வொரு வாய்ப்புக்கும் பதிவுக் கட்டணமாக ரூ.750-ம் வசூலிக்கத் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.