தமிழகத்தில் பல்வேறு கொலை வழக்குகள் மற்றும் குண்டு வைத்த வழக்குகளில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்ட தீவிரவாதி போலீஸ் பக்ருதீன், கடந்த 4ம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டான். அவன் கொடுத்த தகவலின்பேரில் மறுநாள் அவனது கூட்டாளிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் கைது செய்யப்பட்டனர்.கைதான போலீஸ் பக்ருதீனிடம் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க வேலூர் மாஜிஸ்திரேட் அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று வேலூர் ஜெஎம் 3 நீதிமன்ற மாஜிஸ்திரேட் சிவக்குமார் முன்னிலையில் பிலால் மாலிக்குடன் வழக்கறிஞர் புகழேந்தி காலை 11 மணி முதல் 11.30 வரை அரை மணி நேரம் சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக ரகசிய இடத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். பகல் 2.35 மணிக்கு பக்ருதீனை வேலூர் ஜெஎம் 3 கோட்டில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் 30 நிமிடம் தனியாக வழக்கறிஞர் புகழேந்தி பேசினார். அதன் பின்னர் பக்ருதீனை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். போலீஸ் பக்ருதீனை மீண்டும் 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு பிற்பகல் 3 மணியளவில் விசாரணைக்கு வந்தது. இதற்கு பக்ருதீன் வழக்கறிஞர் புகழேந்தி எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட், பக்ருதீனை மீண்டும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். வரும் 18ம் தேதி மாலைக்குள் பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Leave a Reply