திண்டிவனம்: இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 28 பேரை திண்டிவனம் கோர்ட் விடுதலை செய்தது.விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் கடந்த 2007ம் ஆண்டு தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து வந்த நாளிழை எரிக்கும் போராட்டத்தில் அப்போதைய எல்.எல்.ஏ கணபதி, தற்போதைய எம்.எல்.ஏ ஜானகிராமன், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அதைத் தடுக்க முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். இதுதொடர்பாக எம்.எல்.ஏ. உட்பட 28 பேர் மீது வழக்கு பதியப்பட்டு திண்டிவனம் கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. சாட்சி விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், குற்றஞ்சாட்டப்பட்ட அதிமுகவினர் 28 பேரும் நீதிமன்றத்தில் காலையில் இருந்தே காத்திருந்தனர். காலை 10 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது தீர்ப்பு மதியம் 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்து, நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் அனைவரும் விடுவிக்கப்படுவதாக கூறினார்.

Leave a Reply