shadow

ட்டுக்கு மட்டுமின்றி பக்திக்கும் பெயர்பெற்ற நகரம் காஞ்சிபுரம். இந்த ஊரிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஏராளமான கோயில்கள் உண்டு. அவற்றுக்கு மன்னர் பெருமக்கள் ஏராளமான பொருளுதவிகளும் நிவந்தங்களும் அளித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் கோயிலை சீர் செய்து அழகுடன் மிளிரச் செய்திருக் கிறார்கள். அதேபோல, நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களி லுள்ள ஆலயங்களுக்கும் மிகுந்த பொருளுதவி தந்து வழிபட்டிருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில், காஞ்சியில் கோயில் விழா நடந்தால், அதைத் தொடர்ந்து காஞ்சியைச் சுற்றியுள்ள கிராமத்துக் கோயில்களிலும் விழாக்கள் அமர்க்களப்படும். அதேபோல், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் விழாக்கள் நிறைவுற்ற பிறகு, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ள கோயில்களில் விழாக் கொண்டாட்டங்கள் துவங்கும்.

”அண்ணாமலையார் கோயில் விழாவெல்லாம் சிறப்பா முடிஞ்சுருச்சு. அடுத்து ஒரு பத்து நாள்ல, நாம எல்லாரும் குடும்பத்தோடு வண்டி கட்டிக்கிட்டு எந்த ஊருக்குப் போகப் போறோம்னு தெரியுமா?” என்று ஊர்மக்கள் கூடிப் பேசுவார்கள். ‘அடடா… அந்த ஊருக்கா? அங்கே உத்ஸவர் ரொம்ப அழகாச்சே!’ என்று சொல்லி உற்சாகமாவார்கள். பிறகு விழாவுக்கு முன்னதாக, இரட்டை மாட்டு வண்டி கட்டிக்கொண்டு, சமைத்த உணவையும், சமைப்பதற்கான பொருட்களையும் எடுத்துக்கொண்டு, குடும்பத்தாருடனும் அக்கம்பக்கத்தாருடனும் சேர்ந்து கிளம்புவார்கள்.

இப்படித்தான் ஒருகாலத்தில், பாதிரி எனும் கிராமத்துக்கு கும்பல் கும்பலாக வண்டிகளில் வந்து இறங்கினார்கள் பக்தர்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது வந்த வாசி. இங்கிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பாதிரி கிராமம். இங்கே ஏரிக்கரைப் பகுதியில், ஜில்லென்று காற்று தவழும் இடத்தில், அற்புதமாகக் கோயில்கொண்டிருக்கிறார் ஸ்ரீநாராயணர். இங்கே, இந்தத் தலத்தில் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளாக, மடியில் ஸ்ரீலக்ஷ்மியைத் தாங்கி, அமரச் செய்தபடி திருக்காட்சி தருகிறார் திருமால். எனவே இவரின் திருநாமம் – ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள்.

இந்தத் தலத்துக்கு பக்தர்கள் திரளாக வந்து, கோயில் விழாவில் கலந்துகொண்டு, ‘நாராயணா… நாராயணா…’ என்று குரல் எழுப்பி, திருமாலை ஆத்மார்த்தமாக வணங்கி வழிபட்டார்கள். ‘இந்த முறை பெருமாளோட அற்புதமான தரிசனம் கிடைச்சுதுப்பா. நிம்மதியா விவசாயம் பார்க்கலாம். நம்ம மண்ணுல போட்டதெல்லாம் பொன்னாகப் போவுது’ என்று நெக்குருகினார்கள். அதன் படியே விளைச்சல் அமோகமாக இருந்தது. விளைந்ததை எடுத்துக் கூடை கூடையாகச் சுமந்து கொண்டு, பெருமாளுக்குக் காணிக்கை செலுத்தினார்கள். ‘அடுத்த முறையும் இதேபோல நல்ல விளைச்சலைக் கொடுப்பா சாமி’ என்று வேண்டிக்கொண்டார்கள். காடு செழிக்கவும், விளைச்சல் பெருகவும் அருள் செய்து, வீட்டில் தனமும் தானியமும் குறைவின்றி அள்ளித் தரும் திருமாலை, திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள மக்களும் காஞ்சியைச் சுற்றியுள்ள மக்களும் போற்றிக் கொண்டாடினர்.

”ஒருகாலத்துல, ஓஹோனு இருந்த கோயில் இது. இந்தப் பக்கத்துல, ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயில் ரொம்பவே அபூர்வம்! அந்தக் காலத்தில் கோயிலில் திருவிழாவும் திருவீதியுலாவும் அமர்க்களப்படும். ஆனால், காலப்போக்கில் கோயில் சிதைந்து, வாகனங்களும் உடைந்து விட, திருவிழாவும் இல்லை; வழிபாடு களும் குறைஞ்சிடுச்சு!” என்று வருத்தம் தோய்ந்த குரலில் தெரிவிக்கிறார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி.

 

”சுமார் ஆயிரம் வருடப் பழைமை வாய்ந்த கோயில் இது. சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த ஆலயம். ஆனால், கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்து பல வருடங்களாகி விட்டன!” என்று வருத்தத்துடன் தெரிவிக் கிறார்கள், பாதிரி கிராமத்து மக்கள். தற்போது, ஊர்க்காரர்கள் ஒன்றாகச் சேர்ந்து ‘லக்ஷ்மி நாராயணா ஆன்மிக இயக்கம்’ எனும் திருப்பணிக் கமிட்டியைத் துவக்கி, அதன் மூலம் கோயில் திருப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

”ரொம்ப வருஷமா வழிபாடே இல்லாம, கோயிலுக்குள்ளேயே நுழையமுடியாதபடி, முள்ளும் புதருமா கிடந்துது. இப்ப ஊர்மக்களின் ஒத்துழைப்போடு திருப்பணிக்குழு அமைச்சு, கோயிலைப் புனரமைப்புச் செய்யும் வேலை துவங்கியிருக்கு. சீக்கிரமே கும்பாபிஷேகமும் நடந்துடுச்சுன்னா, எங்களுக்கு அதைவிட வேற சந்தோஷம் இல்லை” என்று கண்ணீர்மல்க தெரிவிக்கிறார்கள் திருப்பணிக் கமிட்டியினர்.

புரட்டாசி வந்துவிட்டால், 30 நாட்களும் ஸ்வாமிக்கு அலங்காரம் என்ன, வீதியில் திருவுலா என்ன என்று ஊரே அமர்க்களப்படுமாம்.

”என்ன பிரச்னைன்னாலும் இங்கே வந்து வேண்டிக்கிட்டா, சீக்கிரமே நமக்கு விடிவு காலம் பொறந்துடும். அவ்வளவு வரப்பிரசாதி ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள். குடும்பத்துல ஒற்றுமையே இல்லை, கணவன்- மனைவிக்குள்ளே சண்டையும் பூசலுமாவே இருக்கு, ஒருத்தரை யொருத்தர் புரிஞ்சுக்காம, கிழக்கும் மேற்குமா இருக்காங்கன்னு தவிச்சு மருகிக்கிட்டிருக் கிறவங்க, இங்கு வந்து ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாளுக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் பண்ணி, வேண்டிக் கிட்டாப் போதும்;  கணவனும் மனைவியும் அந்நியோன்யமாகிடுவாங்க” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

இத்தனை சாந்நித்தியம் மிகுந்த, ஸ்ரீலக்ஷ்மி நாராயணர் ஆலயத்தில் பழையபடி வழிபாடுகள் நடக்க வேண்டும்தானே! தன்னை நாடி வருவோருக்கெல்லாம் நிம்மதியையும் ஆனந்தத்தையும் பெருமாள் மனமுவந்து தர வேண்டும்தானே! சந்நிதிகளும் பிராகாரங்களும் பழைய கலைநயத்துடன் பொலிவுக்கு வந்தால்தானே, பெருமாள் மனம் குளிர்ந்து வரம் அருளுவார்!

 

ஸம்ப்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் நடக்கவேண்டும் என்பதுதான் பெருமாள் பக்தர்களின் ஒரே பிரார்த்தனை! ஸ்ரீலக்ஷ்மி நாராயணரின் கோயிலைப் புதுப் பொலிவுக்குக் கொண்டு வருவது பக்தர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து, திருப்பணிக்குக் கைகொடுத்தால், விரைவில் கோயில் பொலிவுபெறும். கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறும்.

ஒரு பூஜைக்காகவும் தரிசனத்துக்காகவும் பூமாலைக்காகவும் நைவேத்தியத்துக்காகவும் பக்தர்கள் நாம் காத்திருக்கலாம். ஆனால், இதெல்லாம் நடைபெற வேண்டும் என்று பகவானே காத்திருக்கலாமா?

 

புராதனப் பெருமைகொண்ட ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள்  கோயிலைப் பராமரித்து, பழுது நீக்கி, திருப்பணிகள் செய்து, பொலிவுக்குக் கொண்டுவருவது நம் ஒவ்வொருவரின் கடமை! அங்கே, வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற நம்மால் ஆனதைச் செய்வோம். நம் வீட்டையும் சந்ததியையும் பெருமாள் அருளிக் காப்பார்!


எங்கே இருக்கிறது?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது வந்தவாசி. இங்கிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பாதிரி கிராமம். இங்கே சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட ஸ்ரீலக்ஷ்மிநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

மெயின் ரோட்டில் இருந்தபடியே கோயிலைப் பார்க்கலாம். வந்தவாசியில் இருந்து பஸ் வசதி உண்டு. ஆட்டோவிலும் செல்லலாம்.

Leave a Reply