shadow

kamadhenu_the_wishfulfilling_divine_cow

எமதர்மராஜனின் மகள் சுனிதா, அவள் கணவன் அங்கா, இவர்களின் புதல்வன்தான் வேனா, எமதர்மராஜனின் பேரனான இவன் தர்மத்தை அழித்து வாழும் அரக்கனாக இருந்தான். அவன் இப்பூவுலகின் மன்னனானதும் அவனது மமதையும் அகங்காரமும் மேலோங்கி நின்றன. தர்மத்தின் காவலனான எமதர்மராஜனின் பேரன் என்பதை மறந்து, அதர்மத்தையே தனது லட்சியமாகக் கொண்டு கொடுங்கோல் ஆட்சி புரிந்தான் அவன். தேவர்களையும் மகரிஷிகளையும், நல்லவர்களையும் விரோதியாகக் கருதி அவர்களை அடக்கி, அழித்தொழிக்கும் செயல்களில் ஈடுபட்டான். தானே முழுமுதற் கடவுள் என்று பிரகடனம் செய்தான். முனிவர்கள் செய்யும் யாகங்களில் தனக்கே முதல் ஆஹுதி தர வேண்டும் எனக் கட்டளையிட்டான். அவ்வாறு செய்ய மறுத்த முனிவர்களின் யாகங்களை அழித்து, அவர்களைத் துன்புறுத்தினான்.

வேனாவின் கொடுங்கோல் ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்டது பூமியும் அதன் இயற்கைச் செல்வங்களும்தான்! வேனாவின் கொடுமைகள் எல்லை மீறியதால் இயற்கை அழிந்துகொண்டிருப்பதைச் சகிக்கமுடியாத பூமாதேவி. தான் படைத்த செல்வங்கள் எல்லாவற்றையும் திருப்பி எடுத்துக்கொண்டு தன்னுள் அடக்கிக் கொண்டாள். ஒரு பசு வடிவம் எடுத்து,அண்ட சராசரங்களில் எங்கோ மறைந்துகொண்டாள். வேனாவின் பூமி எந்தவித இயற்கைச் செல்வங்களும் இன்றி வறண்டு காட்சி தந்தது. பூமியில் தண்ணீர் இல்லை. தாவரங்கள் இல்லை; பசுமை மறைந்தது. நோயும் வறுமையும் மக்களைச் சூழ்ந்துகொண்டன. இந்த நிலையைப் போக்கி, பூமியை வளம் பெறச் செய்ய, மகரிஷிகள் யாகங்கள் செய்தனர். முப்பெரும் தேவர்களைக் நோக்கி தவம் இருந்தனர். முடிந்தவரை பொறுமையாக வேனாவுக்கு அறிவுரை கூறினர். ஆனால், வேனா எவரையும் மதிக்கவில்லை. நல்லோர் உபதேசங்களைக் காதில் வாங்கவில்லை. முப்பெரும் தேவர்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைப் பற்றி இழிவாகப் பேசினான். எல்லா மக்களும் மற்ற கடவுள்களை வழிபடுவதை நிறுத்திவிட்டுத் தனக்கே பூஜை செய்ய வேண்டுமென ஆணையிட்டான்.

4969713443_956ecbea98_z

பொறுமையைக் கடைப்பிடித்து பூமியைக் காக்க தவம் செய்து வந்த சப்த ரிஷிகளும் வேனாவின் கொடும் செயல்களால் கோபம் அடைந்தனர். தர்ப்பை எனும் புனிதமான புல்லைக் கையிலெடுத்து மந்திரங்கள் ஓதி, அந்த தர்ப்பையையே அஸ்திரமாக்கி, வேனா மீது ஏவினர். எமதர்மராஜனும் தன் பேரனை அழித்து பூவுலகைக் காப்பதே தர்மம் எனக் கருதி, தன் பாசக்கயிற்றை வேனா மீது வீசினான். வேனா மடிந்து தரையில் வீழ்ந்தான். தேவர்களும், மகரிஷிகளும் வேனாவின் உடலிலிருந்து அவனது தீய சக்திகள் அனைத்தையும் நீக்கி அழிக்க முடிவு செய்தனர். அதேநேரம், அவனுள் இருந்த சில நல்ல சக்திகளை மட்டும் திரட்டி, அவனுக்கு வாரிசாக ஒரு மகனை உருவாக்கவும் முடிவு செய்தனர். முதலில் அவர்கள், வேனாவின் இறந்த உடலின் தொடையைப் பிளந்து, அதிலிருந்து ஓர் எலும்பால் அந்தத் தொடையைக் கடைந்தனர். அப்போது அவலட்சணமான முகத்துடன், கறுப்பான நிறத்தில், குள்ளமான ஓர் உருவம் தோன்றியது. அந்த உருவம், தான் என்ன செய்ய வேண்டும் என்று மகரிஷிகளைக் கேட்டது. அதற்கு அவர்கள் நிஷாத என்று கூறினர். நீ எதுவும் செய்ய வேண்டாம் சும்மா இரு என்பது அதன் பொருள்.

தீமைகளும் தீய சக்திகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து அழிந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு கூறினர் ரிஷிகள். அந்த உருவத்துக்கு நிஷாதன் என்று பெயர் சூட்டி, விந்திய பர்வதத்தில் அமர்த்தினர். அங்கே வேனாவைச் சூழ்ந்திருந்த தீய சக்திகள் மெதுவாகத் தேய்ந்து மண்ணோடு மண்ணாக மறைந்தன. அதன்பின், வேனாவின் உடலிலிருந்து அவனது நல்ல சக்திகளைப் பெற்று உலகுக்குப் பயன்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர் மகரிஷிகள். அவர்கள் வேனாவின் உடலின் வலது கையைப் பிளந்து கடைந்தபோது, அதிலிருந்து அற்புதமான தேஜஸுடன் நல்ல சக்திகளின் பிரதிநிதியாக ஒரு மனிதன் தோன்றினான். அவனுக்கு பிருது எனப்பெயர் சூட்டினர். பிருது வேறு யாருமல்ல; பூவுலகை அழிவிலிருந்து காக்க ஸ்ரீமகாவிஷ்ணுவே பிருதுவாக அவதரித்தார். பிருது தோன்றியபோது விண்ணிலிருந்து அஜகரா எனும் அற்புத சக்திவாய்ந்த வில்லும், சில அம்புகளும் பூமியில் விழுந்தன. நல்லாட்சி நடத்தத் தோன்றியிருந்த பிருதுவுக்கு, தீமைகளை அழிக்க உதவுவதற்காக அந்த ஆயுதங்கள் தேவர்களால் அளிக்கப்பட்டன.

அந்தத் தருணத்தில் பிரம்மா தோன்றினார் ஆங்கீரஸ் மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க பிரம்மாவே பிருதுவுக்கு முடிசூட்டினார். மன்னனாகப் பொறுப்பேற்ற பிருதுவுக்குப் பல கடமைகள் இருந்தன. பசு வடிவில் இருந்த பூமாதேவியைத் தேடிக் கண்டுபிடித்து, அவளைச் சமாதானப்படுத்தி, தன் நாட்டில் மறைந்த இயற்கை வளங்களைப்பெற்று, மக்களையும் மற்ற ஜீவராசிகளையும் காப்பாற்ற வேண்டியதுதான் அவனது முதல் கடமையாக இருந்தது. இதனால் அவன், பசு வடிவில் எங்கோ மறைந்திருக்கும் பூமாதேவியைத் தேடிப் புறப்பட்டான். ஆனால் பூமாதேவியோ அவன் கண்ணில் படாத இடத்துக்குச் சென்று மறைந்து கொண்டாள். எனினும், பிருது தன் முயற்சியைக் கைவிடவில்லை. இயற்கையைக் காப்பாற்றி மக்களை வாழவைக்கத் துடிக்கும் பிருதுவின் முயற்சியைப் பாராட்டி, பசு வடிவில் இருந்த பூமாதேவியே மணமிரங்கி பிருது முன் தோன்றினாள். பிருது பூமித்தாயை வணங்கி, தன் தந்தை வேனாவுக்காக மன்னிப்புக் கோரினான். மீண்டும் தன் நாட்டை வளமாக்க வழி செய்யவேண்டும் என வேண்டினான்.

11

பிருது மன்னா! என்னிடமிருந்து சுரக்கும் பாலைப் பொழிந்து, அழிந்துபோன இயற்கைச் செல்வங்களை மீண்டும் தோன்றச் செய்கிறேன். ஆனால், என்னிடமிருந்து பால் சுரக்க ஒரு கன்றுக்குட்டி வேண்டுமே…. என பூமாதேவி கூறினாள். பிருது, பூமாதேவிக்கு நன்றி கூறி, ஸ்வாயம்புவ மனு எனும் தேவனை வேண்ட, அவனே கன்றுக்குட்டியாக வந்தான். பசு வடிவில் இருந்த பூமாதேவி பாலைச் சுரந்தாள். அது அருவியாக ஆறாக, ஓடி, பூமியில் பசுமையை உண்டாக்கியது. மறைந்த மரம், செடி, கொடிகளும், மலர்களும் பூமியை அலங்கரித்தன. ஜீவராசிகள் நன்றியோடு பிருதுவையும் பூமாதேவியையும் பூஜித்தன. மனித இனம் வாழத் தேவையான அத்தனை செல்வங்களையும் பூமாதேவி வழங்கினான். பிருது, மகாவிஷ்ணுவின் அம்சம். பூமாதேவி அவன் மார்பில் வாழும் ஒரு பத்தினி, பிருதுவால் தேடிக் கண்டடையப் பெற்றவள் என்பதால் அவள் பிருத்வி எனப் பெயர் பெற்றாள்.

பிருது தோன்றியபோது, அவனது வலது கையில் மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் ரேகை வடிவில் இருந்தது. இதனால் பிருது, விஷ்ணுவின் அம்ஸாவதாரம் என மகரிஷிகள் அறிந்தனர். பிருது, பூமாதேவியை பசு வடிவில் வழிபட்டு பூமியை வளம் பெறச் செய்ய சக்தி தந்தது இந்த சக்கர ரேகைதான் என்று அறிந்து, அவனைச் சக்கரவர்த்தி என்று புகழ்ந்தனர் தேவர்களும் ரிஷிகளும்! சக்கரவர்த்தி என்ற சொல் முதன்முதலில் அடைமொழியானது மன்னன் பிருதுவுக்குத்தான். அவனுக்குப் பிறகு தோன்றி, நாட்டை நலமுடன் ஆண்ட மன்னர்களும் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டனர். பூமியின் அம்சமே பசு வடிவம் ஆனதால், இன்று பூமி பூஜை செய்யும்போதும், வீடுகளில் கிரஹப்ரவேசம் செய்யும்போதும் ஒரு பசு மாட்டையும் கன்றுக்குட்டியையும் கொண்டுவந்து கோபூஜை செய்து வணங்குவது வழக்கத்தில் உள்ளது. இதனால் பிருத்வியின் நல்லாசியும் அருளும் பெற்று சவுபாக்கியங்களுடன் வாழலாம் என்பது நம்பிக்கை.

Leave a Reply