கட்சி பாகுபாடின்றி வாருங்கள். பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கு பேரறிவாளன் வேண்டுகோள்

கட்சி பாகுபாடின்றி வாருங்கள். பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கு பேரறிவாளன் வேண்டுகோள்
Arputhammal04
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 வருடங்களாக சிறையில் வாடுகிறார் பேரறிவாளன். இந்த வழக்கிற்காக இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூன் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு 25 ஆண்டு நிறைவடைவதை அடுத்து அவரையும் அவருடன் சிறையில் வாடும் ஆறு பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதே ஜூன் 11ஆம் தேதி பிரமாண்டமான பேரணி ஒன்று நடைபெறவுள்ளது. வேலூர் சிறையில் இருந்து சென்னை கோட்டை வரை நடைபெறவுள்ள இந்த பேரணிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் இந்த பேரணியில் கலந்து கொள்ள வருபவர்கள் கட்சி பாகுபாடின்றி மனிதாபிமானம் என்றே ஒரே நோக்கத்துடன் வருமாறு பேரறிவாளன் கேட்டுக்கொண்டதாக அவரது தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.

இதுகுறித்து அற்புதம்மாள் மேலும் கூறியதாவது: ”வருகின்ற 11-ம் தேதியோடு பேரறிவாளனை சிறையில் அடைத்து 25 ஆண்டு முடிகிறது. அதையொட்டி ஏழு பேர் விடுதலைக்காகவும் வரும் 11-ம் தேதி நடக்க இருக்கும் பேரணியில், கட்சி பாகுபாடு இன்றி, கட்சி அடையாளமின்றி அனைவரும் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்திருந்தேன். மீண்டும் ஒரு முறை அன்போடு அழைக்கிறேன். என் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இருசக்கர வாகன பேரணியில் கலந்துக்கொள்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும், இந்த பேரணியில் ஈடுபடுபவர்கள் எந்தவித அசம்பாவிதத்திலும் ஈடுபடக்கூடாது எனவும் பேரறிவாளன் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த பேரணி பேரறிவாளனுக்கும், எனக்கும், மற்ற ஆறு பேருக்கும் புதிய நம்பிக்கையை தரும். மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஜெயலலிதா, அவர்களின் விடுதலைக்காக முயற்சி எடுப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறோம். பேரறிவாளன் 25 ஆண்டு கால சிறை வாழ்க்கையிலிருந்து மீண்டு வருவான் என்று காத்திருக்கிறோம்”

இவ்வாறு அற்புதம்மாள் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.