நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

கூட்டம் தொடங்கும் முன் பாட்னா ரயில் நிலையத்திலும், பொதுக்கூட்ட மைதானத்தை சுற்றியும் அடுத்தடுத்து 7 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் இறந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாட்னா ரயில் நிலையத்தில் முதல் குண்டு வெடித்ததை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் இம்தியாஸ் அன்சாரி என்னும் நபரை கைது செய்தனர், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த இவருக்கு இந்தியன் முஜாகிதின் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக தெரிந்தது.

அவரிடமிருந்த செல்போன் நம்பர்களை வைத்து அய்னுல், அக்தர், கலீம் ஆகிய 3 பேரை பாட்னா ரயில் நிலையத்தில் போலீசார் சுற்றி வளைத்தனர். இது தொடர்பாக மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கூட்டத்தில் குண்டு வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

மேலும், கூட்டத்தினரிடம் பீதியை உண்டாக்கி அவர்களை சிதறி ஓடவைத்து கூட்டத்தில் நெரிசலை ஏற்படுத்தவே குண்டு வைத்ததாகவும் , 3 பிரிவுகளாக தாங்கள் வந்ததாகவும் ஒவ்வொரு பிரிவிலும் 6 முதல் 8 பேர் இருந்தனர் என்றும் குண்டுகளை வீசிவிட்டு தப்பிவிடலாம் என்று திட்டமிட்டதாகவும் கைது செய்யப்பட்ட ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply