shadow

parenting-through-divorce

உடல்நலத்திற்கு பிரச்சனை ஏற்பட தீய பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்வியல் முறை, உணவு பழக்கம் என பல காரணங்கள் இருந்தாலும். உங்களது மனதும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. மன சோர்வு, பதட்டம், இறுக்கமான மன நிலையின் காரணங்களினால் ஏற்படும் பல உடல்நல பிரச்சனைகளை பற்றி நாம் படித்திருக்கிறோம். அதற்கான காரணங்கள் அலுவலக வேலைகள், சுற்றுப்புற நச்சரிப்பு என எதை நாம் கூறினாலும் நமது உறவுகளுக்குள் இருக்கும் புழுக்கமான சூழ்நிலை தான் மனதை மிகவும் கவலையடைய செய்கிறது.

நாம் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வர உதவுவது நமது வாழ்க்கை துணையாக தான் இருப்பார்கள். ஆனால், சில தருணங்களில் அவர்கள் மூலமாக தான் நாம் கவலை அடைகிறோம் என்னும் போது மிகுந்த வருத்ததிற்கு உள்ளாகிறோம். இதற்கான தீர்வு மிகவும் எளிதானது இருவரும் மனம்விட்டு பேசினாலே சரியாகிவிடும். ஆனால், அதை விடுத்து மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டு இருப்பதினால் கவலை மேலும் அதிகமாகி பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அதிலும் விவாகரத்து பெற்றவர்களுக்கு இது அதிகமாக நிகழ்கிறது. சரி இனி விவாகரத்து பெறுபவர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்….

பதட்டம்

விவாகரத்து பெற்றவர்களுக்கு அதிகமாக ஏற்படும் பாதிப்பு பதட்டம். சில நாட்களுக்கு முன்பு வரை நமக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்த ஒருவர் இப்போது இல்லை என்ற போது, எந்த ஒரு செயலில் ஈடுப்படும் போதும் ஒருவகையான பதட்டம் ஏற்படும். முன்பு பக்கபலாமாக இருந்து உங்கள் செயல்களில் உதவியாக இருந்தவர் இப்போது இல்லாமல் இருப்பதே அதற்கான காரணம்.

உடல் எடை மாற்றம்

சிலருக்கு உடல் எடை கூடும் சிலருக்கு உடல் எடை குறையும். உடன் இருந்து உங்களை பக்குவமாக பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் இல்லாததே இதற்கான காரணம். சிலர்க்கு அந்த கவலையின் காரணமாகவே உடல் எடையில் மாற்றம் ஏற்படுகிறது.

மன இறுக்கம்

விவாகரத்து பெற்றவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் உடல்நல குறைவு மன இறுக்கமாக தான் இருக்கிறது. அன்றாடம் நிகழ்ந்த விஷயங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு ஆள் இல்லாத போது மன இறுக்கம் அதிகமாகிறது. துக்கமான விஷயங்களை விட நமது வாழ்வில் ஏற்படும் இன்பமான விஷயங்களை கூட பகிர்ந்துக்கொள்ள ஒரு துணை இல்லை என்பது மிகவும் கொடுமையானது.

இதய நோய்கள்

நடுவயதில் விவாகரத்து பெரும் தம்பதியினருக்கு இதய கோளாறுகள் அதிகமாக ஏற்படுகிறது. அதிலும் பெண்கள் தான் பெருவாரியாக பாதிக்க படுகின்றனர். இயற்கையிலேயே இளகிய மனம் கொண்ட பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் மனம் சோர்ந்து போவதினால் தான் அதிகம் இதய பதிப்புகள் ஏற்படுகின்றன.

தீய பழக்கங்கள்

ஆண்கள் விவாகரத்து பெற்ற பின்னர் அதிகமாக போதை பழக்கங்களுக்கும், தீய பழக்கங்களுக்கும் அடிமை ஆகின்றனர். இது அவர்களுக்கு பல உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

தூக்கமின்மை

விவாகரத்து ஆனவர்கள் அதிகமாய் மனிதளவில் பாதிக்கப்படுகின்றனர், இது அவர்களுக்கு தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.

இரத்த அழுத்தம்

அனைத்திற்கும் மேலாக விவாகரத்து ஆனவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாக கருதப்படுவது இரத்தக் கொதிப்பும், இரத்த அழுத்தமும் தான்.

Leave a Reply