நாடாளுமன்ற கூட்டணி குறித்து புதிய திட்டம் வகுத்துள்ளதாக விஜயகாந்த் கூறுவது வெங்காயம் உறித்த கதைதான். பார்க்கத்தான் பெரிதாக இருக்கும். ஆனால் உள்ளே ஒன்றும் இருக்காது என சமீபத்தில் தேமுதிகவில் இருந்து பிரிந்து வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உளுந்தூர்ப்பேட்டை கூட்டத்தில் விஜயகாந்த் பிற கட்சிகளை குழப்பியது போல் தன்னுடைய கட்சி தொண்டர்களையும், தன்னையும் குழப்பியுள்ளார். அவருடைய தேர்தல் கூட்டணி திட்டம் வெங்காய திட்டம்தான். அதில் எதுவுமே இருக்காது. தேமுதிக முக்கிய தலைவர்களை இழந்து தவித்து வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையால் திமுகவுடன் கூட்டணி சேர அனைத்து கட்சிகளும் தயங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சி முடிந்து போன ஒன்று. அந்த கட்சியை பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. நாடு தழுவிய மோடியின் செல்வாக்கு தமிழகத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்த கட்சியால் ஓரளவிற்கு ஓட்டுக்களை வாங்க முடியுமே தவிர, தொகுதியை வெற்றி பெறும் அளவுக்கு அந்த கட்சியிடம் செல்வாக்கு இல்லை.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெறும்,. அதிமுகவின் வெற்றிக்காக நான் தீவிரமாக பிரச்சாரம் செய்வேன். மேலும் வரும் தேர்தலில் நானோ அல்லது எனது மகனோ போட்டியிடமாட்டோம். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டியளித்தார்.

Leave a Reply