சேலத்தில் ஏற்காடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் ஆகியோரிடம் தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஏற்காடு இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இதில் 2 லட்சத்து 34 ஆயிரம் வாக்களர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். தேர்தல் பணிக்காக 2000 பேர் பணியாற்ற உள்ளனர். தேர்தல் நன்னடத்தைப் பற்றி அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறை தொடர்பாக புகார்களை பெற கட்டுப்பாடு அறை அமைக்கப்படும்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க 2 பறக்கும் படை அமைக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்படுகிறது. தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த பிறகு சுகாதாரதுறை அமைச்சர் வீரமணி அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அரசு காரில் வந்தது குறித்து எதிர்கட்சிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்கள் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படும். தேர்தல் பாதுகாப்பிற்காக மத்திய போலீஸ் பாதுகாப்பு படை வரவழைக்கப்படும். தேர்தல் பார்வையாளராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலின்போது பணம் கொடுத்தாலும்,பணம் பெற்றாலும் 1 ஆண்டு சிறை தண்டனை என அவர் கூறினார்.
இலங்கையில் மாநாடு இங்கிலாந்து எதிர்ப்பு
இலங்கையில் நடைபெற்ற போரில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து விட்டு தற்போது அங்கு காமன்வெல்த் மாநாட்டை நடத்தும் இலங்கை அரசு மீது இங்கிலாந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இலங்கையில் இறுதி கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரில் அப்பாவி தமிழர்கள் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்பினர் குற்றஞ்சாற்றி வருகின்றனர். இதை இலங்கை மறுத்து வருகிறது. மேலும் அங்கு தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடப்பதாக சர்வதேச நாடுகள் குற்றஞ்சாற்றி வருகின்றன. இந்நிலையில் அங்கு காமன்வெல்த் மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள கூடாது, அங்கு காமன்வெல்த் மாநாடு நடத்த கூடாது என இந்தியாவில் பல அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

Leave a Reply