பிரபல இந்தி நடிகர் அமீர்கான் – அனுஷ்கா நடிக்கும் இந்திப்படம் ‘பி.கே.’. அரசியல் நையாண்டிப் படம். ராஜ்குமார் ரானி எழுதி இயக்கும் இந்தப்படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் தயார் ஆகி வருகிறது. ராஜ்குமார் ரானியுடன் அமீர்கான் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது சிவபெருமான் வேடமிட்ட ஒருவர் ரிக்க்ஷா ஓட்டுவதாகவும், அதில் பர்தா அணிந்த 2 பெண்கள் உட்கார்ந்து பயணம் செய்வதாகவும் ஒரு காட்சியை படம் பிடிக்க தயாராகினர்.

முதலில் அவர்களைப் பார்த்த மக்கள் ராம்லீலா குழுவினர் என கருதி விட்டனர். அப்போது அந்தக் காட்சியைப் படம்பிடிக்க காமிராக்களை கொண்டு வந்தபோதுதான் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்துக்கு, இது சினிமா படப்பிடிப்பு என தெரிய வந்தது.

உடனே மக்கள் சுதாரித்துக்கொண்டு, சிவபெருமான் வேடமிட்டவரை ரிக்ஷாவை ஓட்ட விடாமல் தடுத்து விட்டனர். அங்கே பெரும் கூட்டமும் கூடி விட்டது. அப்போது அங்கே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் வந்து, என்ன நடந்தது என்பதை விசாரித்ததுடன், சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்துக்கொண்டிருந்த 3 பேரையும் கொட்வாலி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றார்.

அங்கு நடந்த விசாரணையின்போது நடிகர், நடிகைகள், தாங்கள் நடித்தது ஒரு கனவுக்காட்சி என்றும், அங்கே படப்பிடிப்பு நடத்துவதற்கு சட்டப்பூர்வ அனுமதி பெற்றிருப்பதாகவும் கூறினர்.

ஆனால் போலீஸ் நிலையத்துக்கு படையெடுத்த அந்தப் பகுதி மக்கள் கூட்டம், சர்ச்சைக்குரிய படக்காட்சி இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துவதாகக் கூறி கோஷங்கள் போடத் தொடங்கினர்.

அதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் அமீர்கான், டைரக்டர் ராஜ்குமார் ரானி, சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்த நடிகர், நடிகைகள் உள்ளிட்டவர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 295 ஏ( மத உணர்வை காயப்படுத்துதல்), 153 ஏ (இரு பிரிவினர் இடையே பகைமையை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்தச் சம்பவம் டெல்லியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply