shadow

kanniவெள்ளையம்மா… ஜல்லிக்கட்டில் இளைஞர்களுக்கு உள்ளுக்குள் அச்சத்தை ஏற்படுத்தும், அனைவரையும் திரும்பிப் பார்க்கவைக்கும் காளை! ‘அட வெள்ளையம்மா வந்துருச்சுப்பா… அது கையில பரிசுப் பொருள கொடுத்து அனுப்பிடுங்க’ என்று மக்கள் மெச்சும் அளவுக்கு அடங்காத காளையான இதை வளர்ப்பது, கல்லூரி படிப்பை சமீபத்தில் முடித்திருக்கும் மாணவி!

கம்ப்யூட்டர் கிளாஸ், டைப்ரைட்டிங் கிளாஸ் என்று தன் தோழிகள் எல்லாம் சென்றுகொண்டிருக்க, ‘ஏய் வெள்ளயம்மா..!’ என்று கழனிக் காட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் ரேவதியை, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள விளாம்பட்டி கிராமத்தில் சந்தித்தோம்.

”எங்க தாத்தா, பாட்டி காலத்துல இருந்து காளை வளர்த்து ஜல்லிக்கட்டுக்கு விடுவாங்க. எல்லா மஞ்சுவிரட்டு மாடுகளுக்கும், அவை காளையா இருந்தபோதும், எங்க குலதெய்வம் வெள்ளையம்மா பேரைத்தான் வைப்போம். நடுவுல கொஞ்ச நாளு எங்க வீட்டுல ஜல்லிக்கட்டு மாடு இல்லாம இருந்துச்சு. எங்க அம்மாவுக்கு ஒரு முறை அருள் வந்தப்போ, ‘எனக்கு ஒரு காளைக் கன்னுக்குட்டி வளர்த்துவிடு. அதுக்கு வெள்ளையம்மானு பேரு வை’னு சொன்னுச்சு. அப்போதான் இந்த வெள்ளையம்மாவ வாங்கினோம். இது எங்க வீட்டுக்கு வந் தப்போ, எனக்கு அஞ்சு வயசு. அதுல இருந்து இதுதான் என் செல்லம், நான்தான் அதுக்குச் செல் லம்!” என்று வெள்ளையம்மாவின் முதுகை ரேவதி தடவ, சற்று தள்ளி நின்றே பேசினோம் நாம்.

”ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கறது சாதாரண விஷயமில்ல. மொதல்ல அந்த மாட்டுக்கு நம்மளோட வாடைய பழக்கணும். புதுசா வாங்கி வந்தவுடனே மரத்துல 10 நாள் கட்டி வெச்சா, சுத்தி இருக்கற இடத்தோட வாசனையைப் பழகிக்கும். அப்புறம் தூரத்துல நின்னு மாட்டு மேல தண்ணிய பாய்ச்சி அடிக்குறப்ப, உடம்புல இருக்குற கூச்சம் போயிடும். பின்னாடி அந்த மாட்டுக்குத் தேவையானதை தூரத்துல இருந்து கொடுத்து, பிறகு, முதுகைத் தடவிக்கொடுத்து நமக்குப் பழக்கப்படுத்திக்கணும். அதுக்கப்புறம்தான் கொம்பைத் தொட முடியும். ராத்திரி தூங்கும்போது நம்ம கட்டிலோட தலைமாட்டுல மாட்டை கட்டி வெச்சுட்டா, அது நம்மளோட வாடையை நல்லா பழகிக்கிட்டு, எதுவும் செய்யாது. இப்படித்தான் நானும் என் வெள்ளையம்மாவைப் பழக்கினேன்.

காலையில காலேஜுக்குப் போறதுக்கு முன்ன முதல்நாள் நைட்டே ஊறவெச்ச பச்சரிசி, தேங்காய் சில்லு, வைக்கோல் எல்லாத்தையும் வெள்ளையம்மாவுக்கு வெச்சுட்டு காலேஜுக்குப் போயிடுவேன். சாயந்திரம் வந்ததும் மறுபடியும் மாட்டை மேய விடுறது, தீனி போடுறது, தண்ணி வைக்கிறதுனு வெள்ளையம்மா கூடவேதான் பொழுதும் போகும். எங்க வீட்டுல நாங்க அக்கா, தங்கச்சிங்க மூணு பேருமே மாடு பிடிச்சாலும், எம் மேலதான் வெள்ளையம்மாவுக்கு உசுரு. நானும் என் சந்தோஷம், கஷ்டம்னு எதுவானாலும் அதுகிட்டதான் போய் நிப்பேன்” என்று, குடும்ப உறுப்பினராகவே வெள்ளையம்மாவை உச்சி முகர்ந்த ரேவதி, தொடர்ந்தார்…

”வைக்கோலை வெச்சு பொம்மை மாதிரி செஞ்சு, அதை மரத்துல கட்டிவெச்சு, மாட்டோட கயித்த அவுத்துவிட்டு, அப்படியே முட்டுறதுக்கு பழக்குவோம். அதனால கயிறு அவுத்துவிட்டா, எதிர்ல யாராச்சும் வந்தா முட்ட ஓடிடுங்கிறதால, கவனமா பாத்துக்கணும். நம்மைத் தவிர வேற யாரு மாட்டைத் தொட்டாலும் பிரச்னைதான்…” என்றபோது, இன்னும் சில அடிகள் எட்ட நின்றுகொண்டோம்.

”கிட்டி மஞ்சுவிரட்டு, தொழு மஞ்சுவிரட்டுனு ரெண்டு வகை இருக்கு. மாடுகளை தனியா அவுத்துவிடுற கிட்டி மஞ்சுவிரட்டுலதான் வெள்ளையம்மா அதிகமா கலந்துருக்கு. ஜல்லிக்கட்டுப் போறதுக்கு முன்ன எங்க குலசாமி கோயிலுக்குப் போயி வேண்டிட்டு வருவேன். கனவுல சாமி வந்து அருள் சொன்னாதான், மஞ்சுவிரட்டுக்குப் போவேன்” எனும் ரேவதி, பி.காம். முடித்த பிறகு ஊர்க் காவல் படையில் சேர்ந்துள்ளார். கூடவே போலீஸ் வேலைக்காக முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.

”மூணு கலர் டி.வி, அஞ்சு சைக்கிள், ரெண்டு பீரோ, தங்க காசு, வெள்ளி கொலுசுனு எங்க வீட்டுல இருக்குற முக்காவாசி பொருட்கள் எல்லாமே, போட்டியில வெள்ளையம்மா ஜெயிச்சு கொடுத்ததுதான். ஆனா, கால்ல அடிபட்டதால இந்த வருஷ மஞ்சுவிரட்டுக்கு கூட்டிட்டுப் போகல. இப்ப புதுசா இன்னொரு மாடும் வாங்கிப் பழக்கப்படுத்துறேன். அதுக்கும் வெள்ளையம்மானு பேரு வெச்சுருக்கேன். அடுத்த வருஷம் ஜல்லிக்கட்டுல ரெண்டு பேருமே ஜெயிச் சுட்டு வருவாங்க பாருங்க!” என்று ரேவதி சொல்ல, ஜூனியரும் சீனியரும் முன் காலில் மண் தள்ளி கிலி கொடுக்கிறார்கள் நமக்கு!

Leave a Reply