shadow

தாம்பத்ய உறவு இல்லாத தம்பதியின் திருமணம் செல்லாது; மும்பை ஐகோர்ட் உத்தரவு

திருமணமாகி 9 வருடங்களாக தாம்பத்ய உறவு இல்லாத தம்பதியின் திருமணம் செல்லாது என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மும்பை உயர் நீதிமன்றத்தில் இளம்பெண் ஒருவர் தனது திருமணத்தினை ரத்து செய்யும்படி கோரி மனு செய்துள்ளார். அதில், 9 வருடங்களுக்கு முன் கடந்த 2009ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தன்னிடம் வெற்று ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார். அதன்பின் தன்னை பதிவாளர் முன் அழைத்து சென்றார். ஆனால் அது திருமண ஆவணங்கள் என தனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார். அதனால் இந்த திருமணம் செல்லாது என அறிவிக்க கோரியுள்ளார்.

இதற்கு முன்பு, அவரது இந்த கோரிக்கையானது விசாரணை நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டு, திருமணம் ரத்து செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டது. ஆனால் மேல் நீதிமன்றத்தில் அந்த பெண்ணின் கணவருக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது.

இந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி மிருதுளா பத்கர் தனது தீர்ப்பில் கூறும்பொழுது, அந்த பெண் கல்வியறிவு பெற்றவர். பட்டப்படிப்பு படித்தவர். ஆவணங்களில் கையெழுத்து வாங்கி ஏமாற்றப்பட்டு உள்ளார் என கூறுவது நம்புவதற்கு கடினம் ஆக உள்ளது. அதனால் இதில் முறைகேடு செய்ததற்கான சான்று இல்லை என கூறினார்.

ஆனால், தம்பதிக்கு இடையே தாம்பத்ய உறவு இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லாத நிலையில் இந்த திருமணம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் கணவர் தங்களுக்கு இடையே தாம்பத்ய உறவு இருந்தது என்றும் அதனால் பெண் கர்ப்பிணியானார் என்றும் கூறினார். ஆனால், அதற்கான சான்று எதுவும் இல்லை என கூறி நீதிமன்றம் அதனை நிராகரித்து விட்டது.

தம்பதியினர் தங்களுக்கு இடையேயான வேற்றுமைகளை தீர்த்து கொள்ள அறிவுரை வழங்க நீதிமன்றம் முயற்சித்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டி 9 வருட வாழ்க்கையை அழித்து விட்டனர். இந்த நோக்கம் அடுத்தடுத்த வருடங்களிலும் வாழ்க்கையில் தொடர்ந்து நீடிக்கும். இருவருக்கும் இடையே தாம்பத்ய உறவு இல்லாதது சிறப்பு திருமண சட்டத்தின்படி திருமணத்தினை ரத்து செய்வதற்கு வழிவகுக்கின்றது என நீதிபதி கூறியுள்ளார்.

Leave a Reply