இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் கேரளாவில் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் அமலாபாலுடன் இப்போதைக்கு திருமணம் இல்லை என்று கூறியுள்ளார்.
அமலாபாலின் பெற்றோர்கள் இயக்குனர் விஜய்யை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தி வருவதாகவும், அதற்கு விஜய் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் அமலாபாலின் பெற்றோர்கள் மதமாற்ற விவகாரத்தில் பிடிவாதமாக இருப்பதால் அமலாபாலுடனான திருமணத்தை சிறிதுகாலம் தள்ளிவைக்க விஜய் விரும்புகிறார் என கூறப்படுகிறது.
இன்று அவர் விடுத்த அறிவிப்பு ஒன்றில் “எங்களது திருமண திட்டத்தை கண்ணியமாகவும், முறையாகவும் நாங்களே அறிவிக்க வேண்டும் என்று இருந்தோம். ஆனால், எங்களுக்குத் தெரியாமலே அந்த செய்தி வெளியில் வந்து விட்டது. மீடியாக்களிடமும், நண்பர்களிடமும், எங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடமும் எங்களது திருமண திட்டத்தைப் பற்றி நாங்கள் மூடி மறைக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை. மீடியாக்களையும், நண்பர்களையும் தனிப்பட்ட அழைப்புடன் எங்களது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் சந்திப்போம்.
அமலா பால் சில பொறுப்புக்களை முடிக்க வேண்டும். நானும் எனது மனதுக்கு நெருக்கமான ‘சைவம்’ படத்தின் வெளியீட்டை விரைவில் எதிர்நோக்கியுள்ளேன். அதன் பின்தான் எங்களது வாழ்க்கையின் மிக முக்கியமான கொண்டாட்டத்திற்கு நேரம் ஒதுக்க முடியும். அதுவரை என்றென்றும் உங்களது வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும், ஆதரவையும் வேண்டுகிறோம்” என்று கூறியுள்ளார்.
அமலாபாலுக்காக மதம் மாற விஜய்க்கு சிறிதும் விருப்பமில்லை என்றும், அதனால் அமலாபாலின் பெற்றோர்களை சமாதானப்படுத்தவே சிலகாலம் விஜய் திருமணத்தை தள்ளி வைத்திருப்பதாகவும் கோலிவுட்டில் கூறப்படுகிறது.