shadow

greeceகிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அந்நாட்டு பிரதமர் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஐரோப்பிய நாடுகள் கிரீஸுக்கு பெரும்தொகை ஒன்றை கடன் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் மூன்று வாரங்களாக பூட்டியிருந்த வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் ஆகியவைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த கிரீஸ் நாடு, சமீபத்தில் ஐரோப்பிய யூனியனுடன் கடன் மீட்பு திட்டம் ஒன்றை அளித்து, அதற்கு ஒப்புதலும் பெற்று விட்டது. இந்த திட்டத்துக்கு பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸின் சொந்தக் கட்சியினர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், திட்டத்தை கடைபிடிக்க பிரதமர் உறுதியுடன் இருந்தார்.

இதன் அடிப்படையில் பொருளாதார சரிவில் இருந்து மீள்வதற்காக கிரீஸ் நாடு பெருமளவில் வரிகளை உயர்த்துவதோடு, சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திலும் மாற்றங்கள் வருகின்றன. அரசு நிறுவனங்கள் பலவற்றை தனியார் மயமாக்கவும் அலெக்சிஸ் சிப்ராஸின் இடது சாரி அரசு ஒப்புக்கொண்டுள்ளது.     

இந்த நடவடிக்கைகளை அடுத்து கிரீஸ் நாட்டுக்கு 8,600 கோடி யூரோவை 3 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் வழங்க சம்மதித்துள்ளது. இந்த நிலையில் கிரீஸ் நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொருளாதார நெருக்கடிக்காக பல கடினமான நடவடிக்கை எடுத்த பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் மீண்டும் வெற்றி பெறுவாரா? என்பது கேள்விக்குறியே

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய பிரதமரின் தாயார் “எனது மகனுக்கு சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் மட்டுமே சிறிது நேரம் கிடைக்கிறது, குழந்தைகளை பார்க்கக்கூட நேரம் இல்லை. என்னையும் பார்க்க வரவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.     

இந்த நிலையில் பொருளாதார மீட்பு நடவடிக்கையின் முக்கிய நிகழ்வாக கிரீஸ் நாட்டில் இன்று வங்கிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஏற்பாடுகளை வங்கிகள் தீவிரமாக செய்து வருகின்றன. அதே நேரத்தில் அங்கு பொருளாதாரம் புத்துயிர் பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ்க்கு சவாலாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply