ஆபாசம் என்பது நஸ்ரியாவுக்கு கட்டோடு பிடிக்காது. அவர் மனவேதனை கொள்ளும் விதத்தில் சற்குணம் ஒரு காட்சியை பாடி டூபை வைத்து நய்யாண்டி படத்தில் ஒரு பாடலில் இடைச்செருகினார். ஏதாவது பெட்ரூம் காட்சியாக இருக்கும் என்று நினைப்பீர்கள். இது அதைவிட கொடுமை. நஸ்ரியா மாதிரி உடையணிந்திருக்கும் பாடி டூபின் இடுப்புப் பகுதியில் ஹீரோவின் விரல் பட்டும் படாமலும் ஊர்ந்து செல்லும்.
ஆபாசம் கூடவே கூடாது என்பதற்காக சினிமாவுக்கு வந்தவருக்கு எப்படி இருக்கும்?
மன வேதனையில் துடித்தவர் உடனடியாக இந்த ஆபாசத்தை எதிர்த்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். “வேணும்னா அந்த சில நொடி காட்சியை நீக்கிடறோம், குறிப்பிட்ட பாடலில் வேறு எந்தக் காட்சியையும் நாங்க மாற்றவில்லை. வேணும்னா படத்தை உங்களுக்கு போட்டுக் காட்டறோம்“ என்ற இயக்குனர் சற்குணத்தின் தெனாவெட்டான பேச்சை சகிக்க முடியாமல் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் தந்தார். தமிழ் சினிமாவில் இப்படியொரு ஆபாசக் கூத்தை எப்படி சகித்துக் கொள்வது?
கடைசியில் எதிரிகள் இறங்கி வந்தார்கள். அந்த சிலநொடி காட்சியை படத்திலிருந்தே நீக்கியிருக்கிறார்கள். நஸ்ரியா நசீம் என்ற நடிகை ஆபாசத்தை, கவர்ச்சியை எதிர்த்து சினிமாவுக்கு வந்தவருக்கு நீதி கிடைத்தது. இந்த வெற்றி செய்தியை அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை அழைத்து தெரியப்படுத்தினார்.
இதன் மூலம் தமிழ் இயக்குனர்களுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றுதான்.
நஸ்ரியா நசீம் என்ற தனது சமூதாயத்துக்கு கட்டுப்பட்ட நடிகையிடம் நீங்கள் நடிப்பை மட்டுமே எதிர்பார்க்க முடியும். நடிகர்களை கட்டிப் பிடிப்பது, கணுக்காலுக்கு மேலே உடையணிவது, இடுப்பை காட்டுவது, இச் தருவது போன்ற எதையும் அவரிடம் எதிர்பார்க்காதீர்கள். நஸ்ரியாவின் கண்டிஷன்களுக்கு கட்டுப்பட்டவர்கள் மட்டும் கரன்சியோடு அவரை அணுகுங்கள்.

Leave a Reply