shadow

மதுவாடை என்றால் என்னவென்றே தெரியாதவர் விஜயகாந்த். நாஞ்சில் சம்பத்தின் கேலிப்பேச்சு

nanjil sampathதேமுதிக தலைவர் விஜயகாந்த், பூரண மதுவிலக்கு வேண்டி ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி போராட்டம் ஆகியவை நடத்தி வரும் நிலையில் அவர் தற்போது குடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிட்டதாக திமுகவின் முக்கிய தலைவரான கே.என்.நேரு கூறியிருந்த நிலையில் தற்போது அதிமுக தரப்பில் இருந்தும் விஜயகாந்துக்கு விமர்சனம் வெளிவந்துள்ளது. மதுவின் வாடையே என்னவென்று தெரியாத விஜயகாந்த், ஐம்பது பேரை வைத்துக்கொண்டு மனித சங்கிலி நடத்துகிறார் என்று அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கிண்டல் அடித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை ஜீவா நகரில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: “அர்த்த ராத்திரியில் சாட்சி இல்லாமல் பிறந்தவர்கள் எல்லாம் அடுத்த ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். திண்டிவனத்தை தாண்டி வர முடியாதவர்கள் எல்லாம் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள். தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சிக்காரர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அதிமுக என்ற பட்டத்து யானையை வீழ்த்த முடியாமல், மக்கள் ஆதரவுமில்லாததால், இப்போது மதுவை நம்பியுள்ளனர்.

மதுவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி பல ஆண்டுகளாக தமிழகத்தை நாசமாக்கியவர் கருணாநிதி. அவரெல்லாம் இப்போது பேசுகிறார். அந்த குற்றவாளியுடன் கலிங்கப்பட்டி போராளி ஒருவர் சேர்ந்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால் இந்தப் போராளி கலிங்கப்பட்டியில் அடித்து நொறுக்கிய மதுக்கடையின் பங்குதாரர் அவரது தம்பி ரவிச்சந்திரன். இந்த கடையை ஆரம்பத்தில் எடுத்துக்கொடுத்தவர் வைகோதான். இந்த கடையை திறந்தபோது வைகோ எங்கே போனார். இவ்வளவு நாளில்லாமல் இப்போது மட்டும் அது ஞாபகத்துக்கு வந்தது எப்படி? இப்படியெல்லாம் கடையை உடைத்து எங்கள் புரட்சித்தலைவியின் ஆட்சியை அசைத்து பார்க்க முடியாது. கலிங்கப்பட்டியில் நடந்த கலவரம் வைகோவால் திட்டமிடப்பட்டது. இல்லையென்றால் சென்னை, மதுரை என்று பல மாவட்ட செயலாளர்கள் அங்கு வரக் காரணம் என்ன?
 
நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தியை கேள்வி கேட்டேன், ராஜீவ் காந்தியை கேள்வி கேட்டேன் என்று சொல்லும் வைகோ, இவ்வளவு கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட என்ன காரணம். பொணத்தை வைத்து அரசியல் செய்கிறார். கூலிங்க் கிளாஸ் போட்டு சசிபெருமாளின் பிணத்தை தூக்கும்போதே எந்தளவுக்கு வைகோ விளம்பரத்தை விரும்புகிறார் என்பது தெரிந்து விடுகிறது. சசிபெருமாளை எல்லோரும் காந்தியவாதி என்கிறார்கள். மூன்று மனைவிகள் கட்டியவரை எப்படி காந்தியவாதி என்று அழைக்க முடியும். அறவழிப்போராட்டம் நடத்திய மகாத்மாகாந்தி, செல்போன் டவரில் ஏறச்சொன்னாரா? மதுவின் வாடையே என்னவென்று தெரியாத விஜயகாந்த், ஐம்பது பேரை வைத்துக்கொண்டு மனித சங்கிலி நடத்துகிறார்.

புரட்சித்தலைவி அம்மாவின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பி, வெள்ளை அறிக்கை வெளியிடக்கோருகிறார் கருணாநிதி. முதலில் உங்கள் உடல்நிலை, அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்லும் உங்கள் மகன் ஸ்டாலின், உங்கள் குடும்பத்தினரின் உடல் நிலைபற்றி வெள்ளை அறிக்கை வெளியிடத்தயாரா?

மதுவை ஒழிக்க முடியாது. பல மாநிலங்களில் வீட்டிற்கே வந்து மது சப்ளை செய்கிறார்கள். அதனால் மக்கள்தான் மாற வேண்டும். பள்ளி கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்களில் மதுவின் தீமை பற்றி பிரச்சாரம் செய்யுங்கள். தமிழக அரசே மதுவிலக்கு பிரச்சாரம் செய்ய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது”

இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.

Leave a Reply