shadow

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பெயர்ப்பலகை கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து பெறக்கூடிய புகார்கள் அடிப்படையிலும், நியாய விலைக் கடைகள் தணிக்கையின் போது அறியக் கூடிய விவரங்கள் அடிப்படையிலும், தகவல் பலகைகள் நியாய விலைக் கடைகளில் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என தெரிய வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே வழங்கிய அறிவுரைகளோடு, மேலும் சில அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. அதாவது, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தகவல் பலகைகள் கீழ்காணும் விவரங்களை உள்ளடக்கி, குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், காட்சிப்படுத்தப்பட வேண்டும். இன்றியமையாப் பண்டங்கள் இருப்பு விவரம் கடைப் பணியாளரால் தினசரி பூர்த்தி செய்து காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

அறிவிப்பு பலகைகளில், நியாய விலைக் கடையின் வேலை நேரம், இன்றியமையாப் பண்டங்கள் (சிறப்பு அத்தியாவசியப் பண்டங்கள் உட்பட) இருப்பு விவரம், ஆரம்ப இருப்பு பெறப்பட்டது, வினியோகம் செய்யப்பட்டது, இறுதி இருப்பு உள்ளிட்ட விவரங்கள் தினசரி பராமரிக்கப்பட வேண்டும்.

இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படும் அளவு மற்றும் அவற்றின் விற்பனை விலை குறித்த தகவல் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், நியாய விலை கடைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கக் கூடிய உயர் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் செல்பேசி எண்கள் இடம் பெற்றிக்க வேண்டும்.

உணவுத் துறை அமைச்சர் 044-2567 1427, உணவுத் துறை செயலாளர் 044-2567 2224, உணவுப் பொருள் வழங்கல் ஆணையாளர் 044-2859 2255 உள்ளிட்டோரின் எண்கள் இடம் பெற வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.